Diriya

நிதியியல் அளவுகோல் விகிதங்கள்

நீங்கள் உங்கள் வணிகத்தில் முதலீடு செய்ய எதிர்பார்த்து வங்கி அல்லது முதலீட்டாளர்களை அணுகப் போகிறீர்கள் என்றால், நீங்கள் பாரிய திட்டத்தைக் கருத்தில் கொண்டுள்ளீர்கள் என்பதை அவர்களுக்குக் காண்பிக்க வேண்டும். உங்கள் வணிகத்திட்டம் சிறப்பாக இருக்கலாம் ஆனால் அதைவிட முக்கியமானது உங்கள் வணிகத்தில் முதலீடு செய்ய அவர்கள் முடிவெடுக்கும் அடிப்படைக் காரணிகளாகும்.

இந்த சந்தர்ப்பத்தில் நிதியியல் அளவுகோல் விகிதங்கள் பயனுள்ளதாக இருக்கும். நிதியியல் கண்ணோட்டத்தின் கணிதரீதியான விளக்கங்களை வெளிக்கொண்டு வர அவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிதியியல் அளவுகோல் விகிதங்களுக்கிடையிலான உறவுமுறைகள், உங்கள் முதலீட்டாளர்களை பல நிறுவனங்களுடன் ஒப்பிட்டு கவர உதவுவது மட்டுமல்லாமல், வணிகம் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது மற்றும் அதன் முன்னேற்றத்தில் கவனம் தேவைப்படும் பகுதிகளைப் புரிந்துகொள்ளவும் அவை நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு உதவுகின்றன. விகித பகுப்பாய்வு எனப்படும் இந்த செயல்முறை, ஒரு வணிகத்தின் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த கருவியாகும்.

விகித பகுப்பாய்வில் பல்வேறு நிதியியல் அளவுகோல் விகிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவை பெரும்பாலும் கீழேயுள்ளவாறு வகைப்படுத்தப்படுகின்றன.

  1. இலாப விகிதங்கள்
  2. பணப்புழக்க விகிதங்கள்
  3. செயல்திறன் விகிதங்கள்
  4. தொழிற்பாட்டு மூலதன விகிதங்கள்
  5. சொத்து பயன்பாட்டு விகிதங்கள்

நீங்கள் விகிதங்களை மேலும் ஆழமாக ஆராய்ந்தால், வெவ்வேறு வகைப்பாடுகளைக் கண்டுகொள்ள முடியும். இருப்பினும், இந்த விஷயத்தை ஆழமாக ஆராய நீங்கள் விரும்பவில்லை என்றால், மேலே உள்ள குறிப்பிட்ட வகைகளில் இருந்து சில முக்கிய விகிதங்களைப் புரிந்துகொள்வதுடன் நீங்கள் நிறுத்திக் கொள்ளலாம், அவை எந்தவொரு வணிகத்திற்கும் பொதுவானவை என்பதுடன், முக்கியமானவை. உங்கள் வணிகம் நிலையான வளர்ச்சியைக் காண்பித்தால் மற்றும் கடன்கள் குறைந்தபட்சமான அளவில் பேணப்பட்டால், இந்த விகிதங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஆரோக்கியமான வரம்பிற்குள் இருக்கும். உதாரணமாக உங்களிடம் அதிகப்படியான கடன்கள் இருந்தால், உங்கள் வருமானத்தை விட உங்கள் செலவுகள் அதிகமாக இருந்தால், இவை ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்பினுள் இருக்காது. மிக இலகுவாக இணையத்தின் துணையுடன் மேலே உள்ள ஒவ்வொரு வகையிலும் ஆழமான அறிவை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும், எனவே அவற்றை இங்கே நாங்கள் இதற்கு மேலும் விளக்கத் தேவையில்லை.

நிதியியல் அளவுகோல் விகிதங்கள் உங்கள் வணிகத்தின் செயல்திறனின் மூலக் கணிப்பான்களாக இருப்பதால், முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகளை அணுகும்போது ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்பைப் பேணிப் பராமரிப்பது எப்போதும் சிறந்தது. விகிதங்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், வங்கிகள் குறைந்தளவில் உங்களுக்கு சாதகமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் கடன்களை வழங்கும் அல்லது அவை கடன்களை வழங்காமலும் விடலாம்.

இருப்பினும், சில முதலீட்டாளர்கள், விகிதங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்பில் இல்லாவிட்டாலும், ஆபத்தைக் கையில் எடுத்து வணிகத்தில் முதலீடு செய்கின்றனர். அவர்கள் வணிகத்தின் இலக்கு மற்றும் உரிமையாளரின் திறன் காரணமாக நம்பிக்கை கொள்கின்றனர் அல்லது வணிகத்தின் நீண்ட கால வளர்ச்சிவாய்ப்புக்களின் சாத்தியத்தால் ஈர்க்கப்படலாம். அதே சமயம், சில முதலீட்டாளர்கள் விகிதங்கள் நன்றாகப் பராமரிக்கப்பட்டாலும், சில நேரங்களில் உங்கள் வணிகத்தில் முதலீடு செய்ய மாட்டார்கள், ஏனெனில் அவர்களில் சிலர் வணிக மதிப்பீடு தொடர்பான தங்கள் சொந்த அளவுகோல்களைக் கொண்டுள்ளனர். முதலீட்டு முடிவுகள் பல்வேறு காரணிகளிலும் தங்கியுள்ளதால், விகிதங்கள் ஒரு நேரடியான தீர்மானத்திற்கான வழிமுறை அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும், உங்கள் விகிதங்களை தவறாமல் சரிபார்த்து ஆரோக்கியமான நிலைகளை பேணிப் பராமரிப்பது புத்திசாலித்தனமானது. ஏனெனில் அவை பொதுவாக நன்கு செயல்படும் வணிகத்தின் முதன்மையான குறிகாட்டிகளாகக் கருதப்படுகின்றன.

Exit mobile version