Diriya

நிதிசார் மற்றும் நிதி சார்பற்ற கணக்காய்வு எவ்வாறு உங்களது வணிகத்தில் தாக்கம் செலுத்துகின்றது?

உலக வணிக அமைப்பு துரித கதியில் முன்னேற்றம் கண்டுவருவதன் காரணமாக வணிக நிறுவனங்களும் தமது நிதிசார் மற்றும் நிதிசாரா செயற்பாடுகள் பற்றிய பொறுப்புக்கூறலுக்கு அதிகரித்த அளவில் உட்பட்டு வருகின்றன. இது தொடர்பில் காணப்படுகின்ற முக்கியமான விடயங்களுள் ஒன்றுதான் கணக்காய்வு ஆகும். ஒரு நிறுவனத்தின் நிதிசார் மற்றும் நிதிசாரா செயற்பாடுகள் பற்றிய பதிவுகளையும் முறைமைகளையும் பரீட்சித்து மதிப்பீடு செய்கின்ற செயன்முறையே கணக்காய்வு ஆகும். ஒரு நிறுவனத்தின் நிதிசார் மற்றும் நிதிசாரா செயற்பாடுகள் பற்றிய துல்லியமான, நம்பகமான மதிப்பீடுகளை பங்குதாரர்களுக்கு வழங்குவதை கணக்காய்வு நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது. அதன் மூலம் அப்பங்குதாரர்கள் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்த தெளிவான தீர்மானங்களை மேற்கொள்ள கணக்காய்வு துணைபுரிகின்றது.

ஒரு நிறுவனத்தின் நிதி சம்பந்தப்பட்ட பதிவுகள் துல்லியமானவையாகவும் பூரணமானவையாகவும் கணக்கீட்டு நியமங்களுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டனவாகவும் அமைந்துள்ளனவா என்பதனை உறுதி செய்வதற்காக அந்நிறுவனத்தை மதிப்பீட்டுக்குட்படுத்துகின்ற நன்கு கட்டமைக்கப்பட்ட செயன்முறையே நிதிசார் கணக்காய்வு ஆகும். ஐந்தொகை, வருமானக் கூற்றுகள், பணப்புழக்கக் கூற்றுகள் போன்ற நிதிசார் கூற்றுக்களிலேயே நிதிக் கணக்காய்வாளர்கள் குறிப்பாகக் கவனம் செலுத்துகின்றனர். ஒரு நிறுவனம் தனது நிதி நிலைமையினையும், நிதி செயற்பாட்டையும் பணப்புழக்கங்களையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றதா என்பதனை உறுதிப்படுத்துவதற்கான மதிப்பாய்வுகளை அவர்கள் மேற்கொள்வர்.

மறுபுறம், ஒரு நிறுவனத்தின் நிதிசாரா செயற்பாடுகள் பற்றிய பதிவுகளையும் முறைமைகளையும் பரீட்சிப்பது குறித்து கவனம் செலுத்துகின்ற புதியதொரு நடைமுறையே நிதிசார்பற்ற கணக்காய்வு ஆகும். சற்றுச்சூழற் தரவுகள், சமூகவியற் தரவுகள் அரசாட்சி பற்றிய தரவுகள், வாடிக்கையாளர் திருப்தி பற்றிய தரவுகள், பணியாளர் திருப்தி பற்றிய தரவுகள் போன்ற பரந்துபட்ட நிதிசார்பற்ற தரவுகளையே நிதி சார்பற்ற கணக்காய்வாளர்கள் மதிப்பாய்வு செய்கின்றனர். ஒரு நிறுவனத்தின் செயற்பாடுகள் பற்றிய துல்லியமான, நம்பகமான மதிப்பீடுகளை பங்குதாரர்களுக்கு வழங்குவதை நிதிசார்பற்ற கணக்காய்வு நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது. அதன் மூலம் அப்பங்குதாரர்கள் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்த தெளிவான தீர்மானங்களை மேற்கொள்ள அது துணைபுரிகின்றது.

வணிகங்களில் முக்கியத்துவம் பெறுகின்ற நிதிசார் மற்றும் நிதிசாரா கணக்காய்வு மிகைப்படுத்தி விபரிக்க முடியாததாகும். வணிகங்களில் நிதிசார் மற்றும் நிதிசாரா கணக்காய்வு ஏன் அவசியப்படுகின்றது என்பதை விளக்குகின்ற அடிப்படைக் காரணங்கள் சிலவற்றைப் பின்வருமாறு காணலாம்.

பங்குதாரர்களுக்கு துல்லியமானதும் நம்பகமானதுமான தகவல்களை அது வழங்குகின்றது

ஒரு நிறுவனத்தின் நிதிசார் மற்றும் நிதிசாரா செயற்பாடுகள் பற்றிய துல்லியமானதும் நம்பகமானதுமான தகவல்களை நிதிசார் மற்றும் நிதிசாரா கணக்காய்வு பங்குதாரர்களுக்கு வழங்குகின்றது. ஒரு நிறுவனத்தில் முதலீடுகளை மேற்கொள்ளலாமா இல்லையா அல்லது ஒரு நிறுவனத்தில் வணிகத்தைத் தொடர முடியுமா முடியாதா போன்ற விடயங்களில் எதிர்காலம் குறித்த தீர்க்கமான முடிபுகளைப் பங்குதாரர்கள் மேற்கொள்வதற்கு இத்தகவல்கள் இன்றியமைதயாததாக விளங்குகின்றன.

ஒரு நிறுவனத்தின் நற்பெயரை அது மேம்படுத்துகின்றது

ஒழுங்காக மேற்கொள்ளப்பட்ட நிதிசார் மற்றும் நிதிசாரா கணக்காய்வு மூலம் ஒரு நிறுவனத்தின் வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புக்கூறலையும் வெளிக்கொணர்ந்தால் அது அந்நிறுவனத்தின் நற்பெயரை வளர்க்கின்றது. இது ஒரு நிறுவனத்துள் புதிய புதிய வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும், பங்குதாரர்களையும் கவர்வதற்கும் அவர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கும் துணைபுரிகின்றது.

செயற்றிறனையும் தொழிற்றிறனையும் அது அதிகரிக்கின்றது

வணிகங்களில் உள்ள திறன் குன்றிய விடயங்களையும் முன்னேற்றம் காணவேண்டிய விடயங்களையும் இனங்காண்பதற்கு நிதிசார்பற்ற கணக்காய்வு துணைபுரிகின்றது. தொழிற்றிறன்களை முன்னேற்றுவதன் மூலம் வணிகங்களில் செலவுகளைக் குறைத்து, உற்பத்தித் திறனை அதிகரித்து வாடிக்கையாளர் திருப்தியினையும் வளர்த்தெடுக்கலாம். வணிகங்கள் தத்தமது சந்தைகளில் போட்டித்தன்மையை சாதகப்படுத்திக்கொள்வதற்கும் இது துணைபுரிகின்றது.

முன்னேற்றம் காணவேண்டிய பகுதிகளை அது இனங்காணுகின்றது

நிறுவனங்கள் தமது நிதிசார் மற்றும் நிதிசார்பற்ற செயற்பாடுகளில் முன்னேற்றம் காணவேண்டிய பகுதிகளை இனங்காண்பதற்கு நிதிசார் மற்றும் நிதிசார்பற்ற கணக்காய்வு துணைபுரிகின்றது. நிறுவனங்கள் தம்முடைய நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கும் செலவுகளைக் குறைப்பதற்கும் தமது அனைத்துவகை செயற்பாடுகளையும் வளப்படுத்துவதற்கும் இது துணைபுரிகின்றது.

நிறுவனங்கள் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதற்கு அது துணைபுரிகின்றது

நிதிசார் கணக்காய்வு அதிக நிறுவனங்களுக்கு சட்டரீதியாக அவசியப்படுகின்றது. நிறுனங்கள் அரசு சம்பந்தப்பட்ட சிக்கல்களை சமாளிப்பதற்கு நிதிசார்பற்ற கணக்காய்வு அதிகரித்த அளவில் நிறுவனங்களில் முக்கியத்துவம் பெற்று வருகின்றது. நிதிசார் மற்றும் நிதிசார்பற்ற கணக்காய்வினை மேற்கொள்வதன் மூலம் நிறுவனங்கள் தாம் விதிமுறைகளுக்கும் நியமங்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

நிறுவனங்களுக்கு ஏற்படுகின்ற இடர்களை முகாமை செய்வதற்கு அது துணைபுரிகின்றது

நிறுவனங்களின் நிதிசார் மற்றும் நிதிசார்பற்ற செயற்பாடுகள் சம்பந்தமாக ஏற்படுகின்ற இடர்களை இனங்காண்பதற்கும் அதனை முகாமை செய்வதற்கும் நிதிசார் மற்றும் நிதிசார்பற்ற கணக்காய்வு துணைபுரிகின்றது. நிறுவனங்கள் தமக்கு சம்பவிக்கவுள்ள சட்டரீதியான இடர்கள், அபகீர்த்தி இடர்கள் போன்றவற்றைத் தவிர்ந்துகொள்வதற்கும் தமது பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் இது துணைபுரிகின்றது.

தீர்மானம் மேற்கொள்ளலை அது முன்னேற்றுகின்றது

வணிகங்களில் தீர்க்கமான முடிபுகளை எடுப்பதற்குரிய பெறுமதிமிக்க தகவல்களை நிதிசார் மற்றும் நிதிசார்பற்ற கணக்காய்வு வழங்குகின்றது. வணிகங்கள் தமது நிதி நலன்களை மதிப்பிடுவதற்கும் முதலீடுகள், மூலதனச் செலவினங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் மேற்கொள்வதற்கும் துணைபுரிகின்ற நம்பகமான தகவல்களை நிதிசார் கணக்காய்வு வழங்குகின்றது. வணிகங்களில் எவ்வாறு தொழிற்றிறனை முன்னேற்றி செலவுகளைக் குறைக்கலாம் என்பது பற்றிய தீர்மானங்களை மேற்கொள்வதற்குத் துணைபுரிகின்ற நடவடி முறைகளையும் இடர்களையும் பற்றிய நோக்குகளை நிதிசார்பற்ற கணக்காய்வு வழங்குகின்றது.

முடிவாக, வணிகங்கள் தமது வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புக்கூறலையும் வெளிப்படுத்துவதற்கு அவசியமான அம்சங்களைப் பெற்றுக்கொள்ள நிதிசார் மற்றும் நிதிசார்பற்ற கணக்காய்வு அவசியமாகும். ஒரு நிறுவனத்தின் நிதிசார் மற்றும் நிதிசார்பற்ற செயற்பாடுகள் குறித்த துல்லியமானதும் நம்பகமானதுமான தகவல்களை அதன் பங்குதாரர்களுக்கு இச்செயன்முறை வழங்குகின்றது. அத்தகவல்கள் அந்நிறுவனத்தின் எதிர்காலம் குறித்துத் தெளிவான தீர்மானங்களை அவர்கள் மேற்கொள்வதற்குத் துணைபுரிகின்றன. மேலும், நிறுவனங்கள் முன்னேற்றம் காணவேண்டிய பகுதிகளை இனங்கண்டுகொள்வதற்கும், விதிமுறைகளைப் பேணி நடப்பதற்கும், இடர்களை முகாமை செய்வதற்கும் நிதிசார் மற்றும் நிதிசார்பற்ற கணக்காய்வு துணைபுரிகின்றது. இத்தகைய காரணங்களுக்காகவே வணிகங்கள் தம்முடைய நீண்டகால வெற்றிக்காகநிதிசார் மற்றும் நிதிசார்பற்ற கணக்காய்வுகளில் செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.


இந்த உள்ளடக்கமானது CeFEnI/COSME இன் உதவியுடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்டதாகும்.

Exit mobile version