அறிமுகம்
இன்றைய போட்டிகரமான வணிக சூழலில் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் (SME) தம்மை நிலைநிறுத்திகொள்ள பல்வேறு இடர்களை எதிர்கொள்கின்றன. இவ்விடயத்தில் ஆதிக்கம் செலுத்தும் பல காரணிகளுள் ஒன்றான வழங்கல் சங்கிலி முகாமைத்துவம் (supply chain management [SCM]) முக்கியம் வாய்ந்த காரணியாக காணப்படுகிறது. ஓர் சிறந்த இருப்பு கட்டுப்பாடும் நெறிப்படுத்தப்பட்ட வழங்கள் சங்கிலியும் செயல்பாடுகள் மேன்மையாக நடைபெறுவதை உறுதி செய்வதோடு நுகர்வோர் திருப்தி, கிரய கட்டுப்பாடு, மற்றும் பூரண இலாபத்தன்மையையும் உறுதிப்படுத்துகிறது. சிறிய மற்றும் நடுத்தர வணிக முயற்சிகளில் இருப்பை கையாள்வதின் முக்கியத்துவத்தையும் வழங்கல் சங்கிலி முகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தை ஆராய்வதோடு இருப்பை கையாளும் யுக்திகளையும் அவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதையும் காணலாம்.
இருப்பு கையாளுதலும் வழங்கல் சங்கிலி முகாமைத்துவமும்
மூலப்பொருட்களை இனங்காணுதல் தொடக்கம் முடிவுப்பொருளை இறுதி நுகர்வோருக்கு கொண்டுசெல்லும் வரை சரக்கிருப்பு சுழற்சியில் இடம்பெறும் அனைத்து நடவடிக்கைகளையும் வழங்கல் சங்கிலி முகாமைத்துவம் என வரையறுக்கலாம். வழங்கல் சங்கிலி என்றவுடன் நாம் விநியோகஸ்தரில் மாத்திரம் அக்கறை செலுத்துகிறோம். எனினும், இச் சங்கிலியில் நுகர்வோரும் அடங்குகின்றனர். உதாரணமாக, சிறிய பாண் உற்பத்தி நிலையத்தில் வழங்கல் சங்கிலியானது பல்வேறு மட்டங்களை கொண்டிருக்கும். இவ் வணிகத்தின் உற்பத்தியில் மூலப்பொருள்களாக மா, சீனி, வெண்ணெய் மற்றும் முட்டைகள் பயன்படுத்தப்படும். இவ்வாறான வணிகத்தில் வழங்கல் சங்கிலி முகாமைத்துவமானது விநியோகஸ்தரை இனங்காணுதலில் ஆரம்பமாகி, எமக்கு சாதகமான விலை பற்றி கலந்துரையாடி, உயர் தர மூலப்பொருட்களை தொடர்ச்சியாக பெற்று கொள்ளல் வரை செல்லும். இம்மூலப்பொருட்களை கொள்வனவு செய்ததன் பின்னர் உற்பத்தி வணிகமானது உற்பத்தியை ஆரம்பிக்கும். வினைத்திறனான உற்பத்தி திட்டமிடல், உற்பத்தி பொருட்கள் சரியான அலகு மட்டத்தில் சரியான நேரத்தில் நுகர்வோர் கேள்வியை ஈடு செய்யும் விதமாக உற்பத்தி செய்வதை உறுதி செய்தல் போன்ற வழங்கல் சங்கிலி முகாமைத்துவ நடவடிக்கைகள் இச்சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படும். இதனுள் வளப்பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் உற்பத்தி அட்டவணையை பராமரிக்கும் நடவடிக்கையும் உள்ளடக்குகிறது. இவ்வுற்பத்தி வணிகத்தில் இருப்பு மிகை அல்லது குறையை தவிர்க்கும் விதமாக இருப்பை முகாமை செய்வதும் அத்தியாவசியமாகின்றது. வழங்கள் சங்கிலி முகாமைத்துவ யுக்திகளானது கேள்வியை எதிர்வுகூறி, விற்பனை போக்கை இனம்கண்டு மற்றும் உற்பத்தி இயலுமையை நிர்ணயிப்பதன் மூலம் இருப்புகளை பேணக்கூடிய வினைத்திறனான மட்டங்களை தீர்மானிக்க உதவி புரிகின்றது. இதனால் நுகர்வோரின் கேள்வியை பூர்த்தி செய்ய முடிவதோடு மட்டுமின்றி இருப்பு வீணாவதை தடுக்கவும் இருப்பு வைத்திருக்கும் கிரயத்தையும் குறைத்துக்கொள்ளவும் முடிகிறது. இதன் விளைவாக நுகர்வோர் கேள்வியை வினைத்திறனுடனும் குறைந்த காலவரையறையுள்ளும் பூர்த்தி செய்ய முடிகிறது. இதன்போது வாழங்கல் சங்கிலி முகாமைத்துவ செயற்பாடுகளான போக்குவரத்து மற்றும் வழங்கல் சேவைகள் (logistics) மேம்படுத்தல், உரிய விநியோகஸ்தரை தெரிவு செய்தல் மற்றும் காலவரையறையான விநியோகத்தை உறுதி செய்தல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. விநியோக அட்டவணைகைளை ஒருங்கிணைத்தல், போக்குவரத்துக்கு கிரயங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் விநியோகத்தை மேற்பார்வை செய்தல் போன்ற நடவடிக்கைகள் இச்சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. நுகர்வோர் சேவைகளும் வழங்கல் சங்கிலி முகாமைத்துவத்தின் ஓர் பகுதியாகும். மேற்குறிப்பிட்ட வணிகத்தில் நுகர்வோர் கேள்விகளுக்கு உகந்த பதில்களை அளித்தல், பொருட்கள் பற்றிய சரியான தகவல்களை வழங்குதல் மற்றும் நுகர்வோர் புகார்களுக்கும் பிரச்சினைகளுக்கும் உகந்த நடவடிக்கைகளை எடுத்தலும் இன்றியமையாததாகும். விளைத்திறன் மிக்க வழங்கல் சங்கிலி முகாமைத்துவமானது வணிக நோக்கங்கள் மற்றும் மதிப்புகளுக்கு அமைய நுகர்வோர் சேவைகளை கையாண்டு நுகர்வோர் திருப்தியையும் விசுவாசத்தையும் அதிகரிக்கின்றது. வழங்கல் சங்கிலி முகாமைத்துவம் தொடர்ச்சியான மேம்படுத்தல்களுக்கு உள்ளவதன் காரணமாக வினைத்திறன் மற்றும் விளைத்திறன் அதிகரிக்கப்படுகிறது. வணிகமானது செயல்திறனை மதிப்பிடுதல், நுகர்வோர் பின்னூட்டல்கள் மற்றும் சந்தை போக்கு ஆகியவற்றை ஆராய்ந்து மேம்படுத்தகூடிய பகுதிகளை கண்டறிய வேண்டும். மூல பயன்பாடு யுக்திகளை மேம்படுத்துதல், உற்பத்தி செயல்முறைகளை நெறிப்படுத்துதல் அல்லது இருப்பு மேலாண்மையை/கட்டளைகளை பூரணப்படுத்தல் ஆகியவற்றை விருத்தி செய்யும் தொழிநுட்பங்களை உருவாக்குதல் என்பன இதனுள் உள்ளடக்குகிறது.
இருப்பை கையாளுதல் என்பது வணிகத்தில் காணப்படும் மீள்விற்பனை பொருட்களை மேலாண்மை செய்தலும் கட்டுப்படுத்தலும் என வரையறுக்கப்படுகிறது. வழங்கல் சங்கிலி முகாமைத்துவதில் இச்செயல்பாடானது பெரும் பங்குவகிக்கிறது. மேற்குறிப்பிட்ட வணிகத்தில் மூலப்பொருட்கள் கிடைத்தவுடன் அவை உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கு முன் களஞ்சியப்படுத்தப்படல் வேண்டும். களஞ்சிப்படுத்தல் தீர்மானத்தால் பல்வேறு இடர்கள் எழக்கூடும். இதன் காரணமாக வணிகமானது தகுந்த இருப்பு மட்டங்களை தீர்மானித்தல், கொள்வனவு பிரமானத்தை தீர்மானித்தல், கொள்வனவு கிரயம் மற்றும் இருப்பு களஞ்சியப்படுத்தல் கிரயம் என்பவற்றை குறைந்த மட்டத்தில் பேணுதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்தல் அவசியமாகும். சீரான இருப்பு கையாளுதல் மூலமாக செயற்பாட்டு கிரயம் குறைக்கப்படுவதோடு இலாபத்தன்மையும் அதிகரிக்கப்படுகிறது. இருப்பை கையாளும் பொது சில யுக்திகளை பிரயோகிப்பதன் மூலம் SMEs இருப்பை விளைதிறனுடன் மேலாண்மை செய்ய மற்றும் கட்டுப்படுத்த முடியும். SMEs இவ்வாறான யுக்திகளை தெரிவு செய்யும் போது அவற்றை செயல்படுத்த கூடிய தன்மை, குறைந்த கிரயம் மற்றும் தேவைக்கு ஏற்புடையதா என ஆராய வேண்டும்.
பின்வருவன அவ்வாறான SMEs கு பொருத்தமான இருப்பு மேலாண்மை யுக்திகள் ஆகும்.
- பொருளாதார கட்டளை கணியம் (பொ.க.க. (EOQ))
உற்பத்தி துறையில் தொழிற்படும் ஓர் SME பொ.க.க. யுக்தியை பிரயோகிப்பதன் மூலம் மூலப்பொருள் கொள்வனவை சிறப்பாக கையாளலாம். உதாரணமாக சிறிய மரத்தளபாட உற்பத்தியாளர் தனக்கு தேவையான பலகை, இரும்பு மற்றும் ஏனைய பொருட்களை தேவைக்கு ஏற்ப கொள்வனவு செய்யலாம். இதன்போது கட்டளை கிரயத்தையும் பராமரித்தல் கிரயத்தையும் குறைத்து இருப்பு மாட்டங்களை குறைந்த கிரயத்தில் வினைத்திறனுடன் பேணலாம்.
பொ.க.க. கணிப்பதற்கு பின்வரும் தகவல்கள் தேவைப்படுகின்றன.
- வருடாந்த கேள்வி – வியாபாரத்தின் வருடாந்த தகவல்களை உபயோகித்து இவ்வாண்டுக்கான கேள்வியை மதிப்பீடு செய்யலாம்.
- கட்டளை கிரயம் – ஓர் கொள்வனவு கட்டளையை பிறப்பிக்க ஏற்படும் செலவுகளான நிர்வாக செலவுகள், போக்குவரத்துக்கு செலவுகள் போன்ற செலவுகளின் கூட்டுதொகையை குறிக்கும்.
- பராமரிப்பு கிரயம் – ஓர் அலகு இருப்பை ஒரு வருடம் பராமரிக்க ஏற்படும் செலவை குறிக்கும். இதனுள் களஞ்சியசாலை செலவுகள், காப்புறுதி செலவுகள் போன்ற செலவுகள் உள்ளடங்கும்.
இவற்றை கண்டறிந்ததன் பின்னர் பின்வரும் சமன்பாட்டினூடாக பொ.க.க. கணிப்பிட முடியும்.
(2*வருடாந்த கேள்வி (d)*கட்டளை ஒன்றுக்கான கிரயம் (co))ஓர் அலகை ஒரு வருடம் பராமரிதல் கிரயம்(ch)
=(2*d*CO)Ch
இச்சமன்பாட்டில் வெளிப்படும் அலகு எண்ணிக்கையானது நிறுவனத்தின் இருப்பை குறைந்த செலவில் பேணக்கூடிய அளவிலான கொள்வனவு அலகுகள் ஆகும்.
- JIT முறை
இதற்க்கு உதாரணமாக அழகுசார் நிபுணர்களுடன் இயங்கும் பெண்களுக்கான அழகு ஆடை கடையை (boutique) குறிப்பிடலாம். இருப்புகளை களஞ்சியப்படுத்துவதற்கு பதிலாக நிபுணர்களுடன் நெருங்கிய உறவு முறையை பேணி நுகர்வோர் கேள்விக்கு அமைய கட்டளைகளை பிறப்பிப்பர். இது அளவுக்கதிகமான இருப்பு களஞ்சியப்படுதலை குறைக்கும், களஞ்சியப்படுத்தல் கிரயத்தை குறைக்கும் மற்றும் புதிய மற்றும் சந்தையில் புகழ்மிக்க ஆடைகளை கொள்வனவு செய்ய நுகர்வோருக்கு வழிவகுக்கும்.
இந்த உள்ளடக்கமானது CeFEnI/COSME இன் உதவியுடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்டதாகும்.
- ABC பகுப்பாய்வு முறை
ABC பகுப்பாய்வு மூலமாக SMEs தமது இருப்புகளை பெறுமதி மற்றும் விற்பனை பங்களிப்பு அடிப்படையில் வாகைப்படுத்தி பராமரிக்கலாம். உதாரணமாக சிறிய மின் உபகரண கடையில் விலை கூடிய கையடக்க தொலைபேசிகளை (A வகுப்பு) அதிக முக்கியத்துவத்துடனும் நடுத்தர விலையுடைய உபகரணங்களை (B வகுப்பு) நடுத்தர அளவிலான முக்கியத்துவத்துடனும் விலை குறைந்த பட்டி வகைகளை (C வகுப்பு) குறைந்தளவு முக்கியத்துவத்துடனும் வகைப்படுத்தி களஞ்சிப்படுத்தலாம். இது வர்த்தகரின் இருப்புகளை சீராக பேண உதவுவதோடு அதிக கேள்வியுடைய பொருட்களின் இருப்பை உறுதி செய்யவும் வழிவகுக்கிறது.
- VMI (விற்பனையாளர்–மேலாண்மை சரக்கிருப்பு முறை)
SME இணையை மூலமான அழகுசாதன வர்த்தகத்தில் ஈடுபடும் போது அவ்வணிகமானது VMI வசதியை வழங்கும் சக நிலைநாட்டப்பட்ட அழகு சாதன வணிகங்களுடன் தொழிற்படுமிடத்து நிலைநாட்டப்பட்ட அழகு சாதன வணிகங்கள் உண்ணிப்பாக வணிகத்தின் இருப்புகளை ஆராய்ந்து மெய் நேர விற்பனை தரவுகள் அடிப்படையில் சரக்கிருப்புகளை மீள நிரப்பலாம். இச்செயல் SME புதிதான பொருட்களை கையகத்தே வைத்திருப்பதை உறுதி செய்வதோடு, சரக்கு தீர்வதால் ஏற்படும் பிரச்சினைகள், நீண்ட இருப்பு முகாமைத்துவ செயல்பாடுகள் போன்றவற்றை தீர்க்கிறது.
இன்றைய காலகட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களின் வெற்றிக்கு விளைதிறனான இருப்பு கையாளுகை மற்றும் வழங்கல் சங்கிலி முகாமைத்துவம் ஆகியன மிகவும் அத்தியாவசியமான காரணிகளாகின்றன. ஏனெனில் சிறிய வணிகங்கள் சாதாரண சந்தையின் பிரதிகூலங்களை கருத்தில் கொண்டு தமது நுகர்வோரின் எண்ணிக்கையை விரிவடையச்செய்ய இணைய வர்த்தக போக்கை உபயோகிக்கின்றனர். இவ் இணையமயமாக்களானது பொருட்களை உலகளாவிய ரீதியில் விற்பனை செய்ய கூடிய அதே சமயத்தில் சாதாரண வியாபார நேர அட்டவணைக்குள் முடங்காது இருபத்து நான்கு மணித்தியாலங்களும் வியாபாரத்தில் ஈடுபட செய்கிறது. எனினும் இம்மாற்றத்தின் காரணமாக இருப்புகளின் தேவைகளை மதிப்பிட முடியாததாக்கியுள்ளது. உலகளாவிய ரீதியில் நுகர்வோர் பண்டங்களை நுகரும் போது இருப்புகள் ஏதுமற்று ஓர் இணைய வலைத்தளம் காணப்படும் போது அவர்கள் ஏமாற்றகரத்தை உணர்கின்றனர். இன்றைய நவீன உலகில் நுகர்வோர் பண்டங்களுக்கு காத்திருக்காமல் இன்னொரு வியாபாரத்தை நாடி செல்கின்றனர். இதற்காக அவர்களின் நேரமும் விரயமாவதில்லை. வினைத்திறனான இருப்பு மேலாண்மை, பொருட்களை சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பதை உறுதி செய்கிறது. இருப்பு மாற்றங்களை மேம்படுத்துவதன் மூலம் SMEs தமது கிரயங்களை குறைத்துக்கொள்ள முடிகின்றது, இருப்பின்மை அச்சுறுத்தலை தவிர்க்க முடிகிறது, மேலும் நுகர்வோர் திருப்தியையும் அதிகரிக்க முடிகிறது. இது நுகர்வோரின் விசுவாசத்தை அதிகரிக்க செய்கிறது மற்றும் சாதகமான வாய்வழி மேம்படுத்தல்களுக்கு வழிவகுக்கிறது. மேலும் வாடிக்கையாளர்களுடனான நீண்ட கால உறவுமுறைக்கும் புதிய வாடிக்கையாளர்களை தாமதாக்கிக்கொள்ளவும் வழிவகுக்கிறது.
இறுதியாக, இருப்பு கையாளுதலிலும் வழங்கல் சங்கிலியை முகாமைத்துவம் செய்வதிலும் முதலிடும் காலமும் பணமும் SMEs க்கு இன்றியமையாததாகும். இன்றைய போட்டிகாரமான நிலையற்ற வணிக சூழலில் இருப்பு மட்டங்களை சீராக பேணுவதூடாக, செயல்பாடு வினைத்திறனை அதிகரித்துக்கொள்வதன் மூலம், கிரயங்களை குறைத்துகொள்வதன் மூலம், இடர்களை குறைத்துக்கொள்வதன் மூலம், போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் நலன்களை பெறுவதன் மூலம், SME ஆனது செழிப்பான வளர்ச்சியை அனுபவிக்க முடியும். மேற்குறிப்பிட்ட யுக்திகளை கையாள்வதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் தமது முழு திறன்களையும் பிரயோகித்து நீண்ட கால வெற்றியை உறுதிப்படுத்த முடியும்.