இருபத்தோராம் நூற்றாண்டின் கொடிய நோய் மன அழுத்தம் எனில் மிகையாகாது. பல்வேறு சூழ்நிலைகளில் எம்மை அச்சமடைய செய்யும், எரிச்சலூட்டும், குழப்பமடைய செய்யும், ஆபத்தை ஏற்படுத்தும், அல்லது பூரிப்படைய செய்யும் உடல் உள தாக்கங்களை மன அழுத்தம் என வரையருக்கிரார் மோகன்ராஜ் (2012).
பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் நிகழ்வுகளின் விளைவாக பயம், எரிச்சல், குழப்பம், ஆபத்து அல்லது பூரிப்பு போன்ற உணர்வுகளைத் தூண்டக்கூடிய உடல் மற்றும் உள விளைவுகளை மன அழுத்தம் என குறிப்பிடலாம். சுற்றாடல் அழுத்திகளான சத்தம், வெப்பநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசடைவு, மற்றும் தனிப்பட்ட அழுத்திகளான தொழில்சார் அழுத்தங்கள், நிதி பிரச்சினைகள், மற்றும் உறவு ரீதியான பிரச்சினைகள் போன்ற பல்வேறு அக, புற காரணிகளால் மன அழுத்தம் ஏற்படலாம். எமது உடல் அழுத்தங்களை எதிர்கொள்ளும் போது, “fight-or-flight (எதிர் அல்லது தவிர்)” என்ற உளவியல் தாக்கத்தை இயல்பாக ஏற்படுத்தி எமது உடலை அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க தயார் செய்கிறது. இத்தாக்கமானது “adrenaline” மற்றும் “cortisol” போன்ற ஓமோன்களை சுரக்க செய்கிறது. இதன் விளைவாக இதய துடிப்பு வீதம், இரத்த அழுத்தம், மற்றும் சுவாச வீதம் ஆகியவை அதிகரிக்கின்றன.
மன அழுத்த வரலாறு
தொடர்ச்சியான சூழல் மாற்றங்கள், போட்டிகரமான மற்றும் சிக்கலான வாழ்க்கை முறைகள், மற்றும் வரையறையான ஓய்வு நேரம் போன்ற காரணிகள் ஓர் கேள்விகரமான மற்றும் சவால்மிக்க சூழ்நிலையை உருவாக்கி மன அழுத்தத்தை உலகலாவிய ரீதியில் பரவியிருக்கும் ஓர் பிரச்சினையாக மாற்றியிருக்கின்றன. (Kushnir et al., 2021). உள்நாட்டுப் போர்கள், வறுமை, பொருளாதார பின்னடைவு, பணவீக்கம், வேலைவாய்ப்பியின்மை, தொற்றுநோய்கள் மற்றும் சமூக-அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளின் கீழான அரசியல் ஸ்திரமின்மை போன்ற தற்காலிக காரணங்களும் தனிநபர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க தாக்கம் செலுத்துகின்றன. (Lazarus & Folkman, 1984). இன ரீதியான சிறுபான்மயினர், பாலின ரீதியான சிறுபான்மையினர், கீழ்தரமான சமூக வகுப்புக்கள் மற்றும் சாதிகளை சேர்ந்தவர்கள் போன்ற சமூகத்தால் தாழ்த்தப்பட்ட சிறுபாண்மையினர் ஏனையவர்களுடன் ஒப்பிடுகையில் அதிகளான மன அழுத்தத்துக்கு உட்பட்டவர்களாக காணப்படுவதாக ஆராய்ச்சிகளில் தெளிவூட்டுகின்றனர் (Pascoe & Richman, 2009). மன அழுத்தத்தின் பரவல் மற்றும் அதன் தாக்கத்தால் உடல் உள நலத்தில் ஏற்படும் பாதகமான விளைவுகள் போன்ற காரணங்களால் வினைத்திறன் மிக்க மன அழுத்த முகாமைத்துவம் இன்றியமையாத்தாகின்றது. தனி நபர்களின் வினைத்திறனான மன அழுத்த முகாமைத்துவத்துக்கும் சீராண உடல் உள நலத்துக்கும் மன அழுத்த முகாமைத்துவ பொறிமுறைகளை மேம்படுத்தலும் ஊக்குவித்தலும் முக்கியத்துவமாகின்றன. ராசலிங்கம் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இலங்கை முழுவதும் சுமார் 40%கும் மேற்பட்ட இளம் பருவத்தினர் மன நிலை ஆரோக்கியம் குன்றி காணப்படுகின்றனர். இவர்கள் தனிமை, கவலை, மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் வாழ்வதாக குறிப்பிடுகின்றார். இத்தரவானது உலகலாவிய ரீதியில் ஒப்பிடுகையில் 10% – 20% க்கு இடைப்பட்டு காணப்படுகின்றது.
நிறுவனங்களில் காணப்படும் பல்வேறுபட்ட நிலைமட்டங்களில் பல்வேறுபட்ட அழுத்திகளின் தாக்கத்தை அவதானிக்க முடியும். மன அழுத்தமானது நிறுவனங்களில் குழு மட்டத்தில் அல்லது தனிநபர் மட்டத்தில் அல்லது நிறுவனத்துக்கு வெளியான மட்டத்தில் ஏற்படலாம் என குறிப்பிடுகிறார் லூதன்ஸ் (2011). நிறுவனங்களில் மன அழுத்தமானது தொழில் பாதுகாப்பின்மை, உயர் மட்ட முகாமையாளர்களின் ஆதரவின்மை மற்றும் பாதகமான வேலை நிபந்தனைகள் போன்ற காரணிகளால் ஏற்படுகின்றன (Scherer & Hwang, 2018). குழு மட்டத்திலான அழுத்தங்களானது குழு உறுப்பினர்களுக்கிடையிலான கருத்து முரண்பாடுகள், தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு பற்றாக்குறைகள், தொழில்ச்சுமை பகிர்வில் சமத்துவமின்மை போன்ற காரணிகளால் ஏற்படலாம் (Lazarus & Folkman, 1984). தனிநபர் மட்ட அழுத்திகளானது தனியாள் ஆளுமை, ஒருங்குமுறையான வாழ்க்கை பொறிமுறைகள் மற்றும் அழுத்தங்கள் மீதான தனிநபரின் பார்வை போன்ற காரணிகளுக்கு ஏற்ப வேறுபடும் (Luthans, 2011). வெளியக நிறுவன காரணிகளான தொழில் சார் சூழலுக்கு வெளிப்பட்ட குடும்ப சிக்கல்கள், நிதி சிக்கல்கள், ஆரோக்கியம் சார்ந்த அக்கறைகள் போன்ற காரணிகள் தனிநபர்களின் மன அழுத்த மட்டங்களில் தாக்கம் செலுத்துகின்றன (Scherer & Hwang, 2018). பல்வேறு அழுத்த மட்டங்கள் மற்றும் அதன் மூலங்களை இனங்காணுதல் ஓர் நிறுவனத்துக்கு, அந்நிறுவனத்தை சார்ந்த நபர்களுக்கு ஏற்படும் மன அழுத்த்தை கட்டுப்படுத்தவும் ஊழியர் நலனை மேம்படுத்தவும் உதவுகின்றன.
மன அழுத்த்தின் விளைவுகள்
லூதன்ஸ்(2011), மன அழுத்த்தமானது ஓர் தனிநபர்க்கு உளவியல் ரீதியான, உடலியல் ரீதியான மற்றும் நடத்தை சார்ந்த விளைவுகளை ஏற்படுத்துவதாக குறிப்பிடுகிறார். உளவியல் சார்ந்த விளைவுகளாக கவலை, மனச்சோர்வு, மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் மந்தநிலை போன்ற விளைவுகளை குறிப்பிடலாம். தனநபர் மன அழுத்த்தை எதிர்கொள்ளும் போது தனது உணர்வுகளை கட்டுப்படுத்த தவறுகின்றனர். இதன் காரணமாக தன்னை ஆதரவற்றவராக, நம்பிக்கையற்றவராக, மற்றும் சுயமரியாதை குன்றியவராக உணர்கிறார்.. இவ் விளைவானது, தொழில் திருப்தியை குன்ற செய்யும் அதே சமயம் செயல்திறனையும் மந்தமடைய செய்கிறது. உடலியல் ரீதியான விளைவுகளாக உடல் நலச்சிக்கல்களான இதய நோய்கள், தசை சார் பிரச்சினைகள் மற்றும் இரைப்பை குடல் சார் பிரச்சினைகள் போன்றன குறிப்பிடப்படுகின்றன. வெகு நாட்களாக காணப்படும் மன அழுத்தமானது ஒருவரின் வாழ்க்கை தரத்தை குறைக்கும். நடத்தை சார் விளைவுகளுள் ஊழியர் விலகலில் அதிகரிப்பு, ஊழியர் உற்பத்தி திறன் குரைவடைதல், மூலப்பொருட்களின் வீண் விரயம் அதிகரித்தல் என்பன உள்ளடங்குகின்றன. மன அழுத்தமானது ஒருவரின் கவனிக்கும் திறனை குறைத்து வேலைகளில் தவறுகளை அதிகரித்து செயற்பாடுகளை பூர்த்தி செய்வதற்கான ஊக்கத்தை குறைக்கிறது (Luthans, 2011). மேலும் சில தனிநபர்களை மன அழுத்தமானது சில ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களுக்கு உட்படுத்துகிறது. உதாரணமாக, அதிகமான அளவில் ஆகாரங்களை உட்கொள்ளல் அல்லது புகைப்பிடித்தல் போன்றவற்றை குறிப்படலாம். இப்பழக்கவழக்கங்கள் மேலும் இடர்களை உருவாக்கும். தனிநபர்களும் நிறுவனங்களும் மேற்குறிப்பிட்ட விளைவுகளை ஆராய்ந்து அவற்றை முறையாக கையாள வேண்டும். இவற்றுள் பிரச்சினைகளை மையப்படுத்திய மற்றும் உணர்ச்சிகளை மையப்படுத்திய பொறிமுறைகள் உள்ளடக்கப்படுகின்றன. இப்பொறிமுறைகளுக்கு உதாரணங்களாக, உடற்பயிற்சி செய்தல், நேர முகாமைத்துவம் மற்றும் சமூக ஒத்துழைப்பை நாடுதல் போன்றவற்றை குறிப்பிடலாம். நிறுவனங்களானது மன அழுத்தத்துக்கு காரணமான மூல காரணிகளான வேலைச்சுமை மற்றும் கடுமையான வேலை நிபந்தனைகளை ஒழிக்கும் மற்றும் ஊழியர்களின் மன அழுத்தத்தை முகாமை செய்ய ஏதுவான வளங்களை பெற்றுத்தரும் சிறந்த வேலைச்சூழலை உருவாக்க முடியும்.
மன அழுத்தத்தை முகாமை செய்தல்
மன அழுத்த்தை முகாமை செய்யும் போது, பிரச்சினைகளை மையப்படுத்திய மற்றும் உணர்ச்சிகளை மையப்படுத்திய பொறிமுறைகளை கையாள முடியும். தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பிரச்சினைகளை மையப்படுத்திய பொறிமுறையை மன அழுத்தத்துகான மூல காரணங்களை கட்டுப்படுத்தும் விதமாக செயற்படுத்த முடியும். இதன் போது தனி நபர்கள் நேர முகாமைத்துவம், தொழில் முன்னுரிமைப்படுத்தல் மற்றும் ஓர் வழிகாட்டியை பின்பற்றுதல் போன்ற நடத்தை சார் சுய கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றி வினைத்திறனாக கையாள முடியும் (Lazarus & Folkman, 1984). நிறுவனங்கள் வேலை வடிவமைப்புக்களை சிறந்த முறைகளில் வடிவமைத்தல், நிறுவனத்தில் தனிநபரின் பாத்திரத்தை தெளிவுபடுத்தல் இலகுவான வேலை அட்டவணைகள் வழங்குதல், வேலை பகிர்வு மற்றும் தொடர்பாடல் முறைகள் போன்றன மூலம் ஊழியர்களிடையே காணப்படும் மன அழுத்த்தை இழிவான மட்டத்தில் பேணலாம் (Scherer & Hwang, 2018). உணர்ச்சிகளை மையப்படுத்திய பொறிமுறைகள் உள ரீதியான பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவுகின்றன. தனிநபர்கள் உடற்பயிற்சி, தியானித்தல், சமூக ஒத்துழைப்பு, மருத்துவ ஆலொசனைகள், சமூகமயமாதல், கலையுருவாக்கம் மற்றும் செயலிழக்கச்செய்தல் பொறிமுறைகள் போன்ற உணர்ச்சிகளை மையப்படுத்திய பொறிமுறைகள் மூலம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றனர் (Lazarus & Folkman, 1984). நிறுவனங்கள் தமது வேலைதளத்தில் உடற்பயிற்சி வசதிகளை வழங்குதல், நிறுவன கட்டமைப்பு, கொள்கைகள், செயன்முறைகள் போன்றவற்றை சரியாக கையாண்டு சிறந்த நிறுவன சூழலை உருவாக்குதல், ஊழியர் உதவி திட்டங்களை அமுல்படுத்துதல், போதிய அளவான ஓய்வு நாட்களை வழங்குதல் மூலமாக ஊழியர்களின் மன அழுத்தத்தை சீராண மட்டத்தில் பராமரிக்க முடியும் (Scherer & Hwang, 2018). பிரச்சினைகளை மையப்படுத்திய மற்றும் உணர்ச்சிகளை மையப்படுத்திய பொறிமுறைகளை ஒன்றாக உபயோகித்து மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். மன அழுத்தத்தின் மூல காரணங்களை ஆராய்ந்து அவற்றால் ஏற்படும் தாக்கங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் தனிநபர்களும் நிறுவனங்களும் ஓர் ஆரோக்கியமான மற்றும் உற்பத்தி திறன் மிகுந்த வேலைத்தளத்தை நிலைநாட்ட முடியும்.
இந்த உள்ளடக்கமானது CeFEnI/COSME இன் உதவியுடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்டதாகும்.