மூலோபாய திட்டமிடலானது சிறிதோ அல்லது பெரிதோ என அளவு அடிப்படையில் கருத்திற் கொள்ளாது எந்த வியாபாரத்திற்கும் முக்கியமானாகும். சிறிய வியாபாரங்களைப் பொறுத்தவரை மூலோபாய திட்டங்களானது மாறும் சந்தைகளுக்கு ஏற்ப சிறிய வியாபாரங்களின் நிலைத்திருப்பிற்கு முக்கியத்துவம் கொண்டதாக காணப்படுகின்றது. வெற்றிக்கான நோக்கம் ஒன்றை அமைத்தல், குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளை வரைவிலக்கணம் செய்தல், வியூகங்களை கட்டமைத்தல் என நாம் இங்கே சிறிய வியாபாரங்களுக்கான மூலோபாய திட்டங்களின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்வையிடுவோம்.
அடிப்படை: நோக்கம் மற்றும் இலக்கு
நோக்கம் ஒழுங்கமைத்தல்
வியாபாரத்தின் நோக்க அறிக்கை (Vision Statement) ஒன்றை தீர்மானிப்பதென்பது ஒரு வியாபாரம் நீண்ட காலத்திற்கு எதனை அடைய விரும்புகின்றது என்பதற்கு, ஊக்கமளிக்கும் ஒரு விடயமாக கருதப்படுகின்றது. அது நிறுவனம் ஒன்றுக்கு அதன் எதிர்காலம் குறித்து வழிகாட்டும் ஒரு ஒளிச்சுடராக இருப்பதோடு குறிப்பிட்ட நிறுவனத்தின் விருப்பத்திற்குரிய எதிர்கால நிலை பற்றி அறியவும் உதவுகின்றது. சிறு வியாபாரங்கள், தமக்கான வியாபார நோக்கம் ஒன்றினை ஒழுங்கமைப்பது மூலோபாய திட்டமிடலில் ஒரு அடிப்படைப் படியாகும்.
நோக்கம் தொடர்பிலான அறிக்கை ஒன்றை ஒழுங்கமைக்கும் போது இந்த விடயங்களை கருத்திற்கொள்ளுங்கள்:
● தெளிவு: உங்கள் நோக்கமானது தெளிவாகவும், இலகுவாகவும் உங்கள் நிறுவன ஊழியர்கள், வியாபார பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதனை உறுதி செய்யுங்கள்.
● முன்னுதாரணம்: இதனை உங்களது குழு உறுப்பினர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையிலும், அவர்களை ஒரு பொது இலக்கினை நோக்கி ஊக்குவிக்கும் வகையிலும் உருவாக்குங்கள்
● ஒருமைப்பாடு: உங்களது நோக்கமானது, உங்களது இலக்கு, உங்களது இலக்கு மற்றும் சந்தை நிலைமைகளுடன் ஒருமித்திருப்பதனை உறுதி செய்யுங்கள்.
● உண்மைத்தன்மை: நோக்கள் இலட்சியங்களை கொண்டிருப்பதோடு மாத்திரமின்றி அவை அடையப்படக்கூடியதாகவும் இருக்க வேண்டும், எனவே உங்களது அணியானது அதனை அடைவதில் தொடர்ந்தும் ஊக்கத்துடனும், நம்பிக்கையுடனும் காணப்படும்.
எடுத்துக்காட்டாக, ஒரு சிறிய உள்ளூர் வெதுப்பகமானது (Bakery) இவ்வாறானதொரு நோக்கத்தினை கொண்டிருக்க முடியும்: “புதிதாக தயாரிக்கப்படும் வெதுப்பக பொருட்களுக்குரிய (Baked Goods) தனித்துவமிக்க இடமாகவும், அதியுயர் தரம் மற்றும் அதிசிறந்த வாடிக்கையாளர் சேவையினை வழங்குவதற்கான அர்ப்பணிப்புடன் காணப்படும் இடமாகவும் இருத்தல்”
இலக்கினை தீர்மானித்தல்
உங்கள் வியாபாரத்தின் இலக்கு தொடர்பிலான அறிக்கையை (Mission Statement) தயாரிப்பதென்பது, உங்களது வியாபாரத்தின் நோக்கத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அதன் எதிர்பார்ப்பினை நிறைவு செய்கிறது. அத்துடன் இது உங்கள் வியாபாரம் ஏன் காணப்படுகின்றது மற்றும் தினசரி அடிப்படையில் அது எதனை அடைய வேண்டும் போன்ற கேள்விகளுக்கும் பதில் வழங்குகின்றது. இலக்கு தொடர்பிலான அறிக்கையானது தனித்துவமானதாகவும், சுருக்கமாகவும், செயல்படக்கூடிய விதத்திலும் இருக்க வேண்டும்.
உங்களது இலக்கினை தீர்மானிக்கும் போது, இந்த விடயங்களை கவனியுங்கள்
● நோக்கம்: உங்கள் வியாபாரம் ஏன் இருக்கின்றது என்பது தொடர்பிலும், அதனால் உங்களது வாடிக்கையாளர்களுக்கும், உங்களைச் சார்ந்த சமூகத்திற்கும் என்ன நன்மை கிடைக்கும் என்பதனையும் தெளிவுபடுத்துங்கள்
● பெறுமதிகள்: உங்களது வியாபாரத்தினை ஒழுங்கமைக்கும் அடிப்படை விழுமியங்களையும், செயற்பாடுகளை முன்னெடுக்க உதவும் தத்துவங்களையும் பிரதிபலிக்கும் வகையில் செயற்படுங்கள்.
● தனித்துவம்: உங்களது வியாபாரம் ஏனைய போட்டியாளர்களிடம் இருந்து தனித்துவமாக தெரிவதனை உறுதி செய்யுங்கள்
நமது உள்ளூர் வெதுப்பகத்தின், இலக்கு தொடர்பிலான அறிக்கையானது இவ்வாறு காணப்பட முடியும்: “உள்நாட்டு உற்பத்தி பொருட்களை முடிந்தவரை பயன்படுத்தி எங்கள் சமூகத்தையும், ஒவ்வொரு குடும்பத்தினையும் அன்பால் அரவணைக்கும் வகையில் வரவேற்கத்தக்க சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.”
இலக்குகளையும், குறிக்கோள்களையும் அமைத்தல்
தெளிவான நோக்கு மற்றும் குறிக்கோள்களுடன், அடுத்த கட்ட நடவடிக்கை, இலக்குகளை நிர்ணயிப்பது என்பது அவற்றினை இலகுவாக அடைய உதவும். இலக்குகள் என்பவை விரிவானவை, அவை உங்கள் நோக்கம் மற்றும் குறிக்கோளுடன் இணைந்த அறிக்கைகளாக காணப்படுகின்றன. இதேவேளை குறிக்கோள்கள் தனித்துவமானதாகவும், அவை அளவிடக்கூடிய மற்றும் நேரம் சார்ந்த இலக்குகளை மையப்படுத்தியும் இருக்கின்றன. சிறு வியாபாரங்கள் பெரும்பாலும் குறைந்த வளங்களைக் கொண்டுள்ளன. எனவே முக்கிய சில இலக்குகள் மற்றும் குறிக்கோள்கள் மீது கவனம் செலுத்துவது என்பது முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்த உதவும்.
உங்களது இலக்குகளையும், குறிக்கோள்களையும் தீர்மானிக்கும் போது, இந்த விடயங்களை கவனியுங்கள்:
● சதூர்யமிக்க அளவுகோல்: உங்களது குறிக்கோள்கள் தனித்துவமானதாகவும், அளவிடக்கூடியதாகவும், அடையக்கூடிய விதத்தில் இருப்பதனை உறுதி செய்ய வேண்டும்.
● முன்னுரிமை அளித்தல்: வியாபாரத்தினை முன்னேற்றும் முக்கியமான இலக்குகளுக்கு முக்கியத்துவம் வழங்குதல்.
● ஒருமைப்பாடு: உங்களது ஒவ்வொரு குறிக்கோள்களும் உங்களது இலக்கிற்கும், நோக்கத்திற்கும் ஒத்திசைவாக இருப்பதனை உறுதிப்படுத்துங்கள்.
உதாரணமாக எங்கள் வெதுப்பகம் ”எங்கள் வெதுப்பகம் எங்கள் நகரத்தில் அதிகமான சிறந்த மதிப்பாய்வுகளைப் பெற்றதாக இருக்க வேண்டும்.” என்னும் இலக்கினை அடைவதற்காக ”வாடிக்கையாளர் மதிப்பீடுகளை அடுத்த ஆண்டிற்குள் டிஜிட்டல் செயல்தளங்களில் 20% அதிகரிக்க வேண்டும்” என்னும் குறிக்கோளை கொண்டிருக்கலாம்.
வெற்றிக்கான வியூகங்களை கட்டமைத்தல்
நீங்கள் உங்கள் இலக்குகளையும், குறிக்கோள்களையும் சரியான இடத்தில் நிலைநிறுத்தும் போது, அவற்றினை அடைவதற்காக வியூகங்களை அமைப்பதும் முக்கியமானதாகும். வியூகங்கள் என்பவை உங்களது குறிக்கோள்களை அடையும் நோக்கில் வளங்களை நீங்கள் நிர்வகிப்பதற்கான, தீர்மானங்களை மேற்கொள்வதற்கான, செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான உயர்தர திட்டங்களாக காணப்படுகின்றன.
ஒரு வெதுப்பகமானது பின்வரும் வியூகங்கள் தொடர்பில் கவனம் செலுத்த முடியும்:
● உற்பத்தி விரிவாக்கம்: புதிய உற்பத்திகள் தொடர்பிலும், பண்டிகைக்காலங்களுக்கான சலுகைகளையும் வாடிக்களையாளர் தொகுதியினை விரிவாக்க முடியும்.
● சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரங்கள்: உள்ளூர் விளம்பரங்களோடு, ஊடகங்கள் வாயிலான சந்தைப்படுத்தல் மற்றும் பங்குதாரர்கள் (Partnership) உடன் இணைந்து வியாபாரத்தின் வெளிப்படுதன்மையினை அதிகரிக்க முடியும்.
● வாடிக்கையாளர் அனுபவம்: வாடிக்கையாளர் சேவையினை மெருகூட்டுவதோடு, அவர்களுடன் சமூக வலைதளங்கள் மற்றும் ஏனைய வெகுமதி நிகழ்ச்சித்திட்டங்கள் (Loyalty Programs) வாயிலாக நீண்ட உறவு ஒன்றைப் பேணுவதற்காக தொடர்ந்து இணைந்திருத்தல்.
● செயற்பாட்டு வினைத்திறன்: தொடர் முறையிலான உற்பத்திகளோடு, சரியான விதத்தில் பாவனைப் பொருட்களை கையாள்தல் போன்ற விடயங்கள் இலாபத்தினை அதிகரிக்க உதவியாக இருக்கும்.
● சமூகங்கள் உடனான தொடர்பு: தொடர்ச்சியாக சமூகங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தும் அறக்கட்டளைப் பணிகள் போன்ற விடயங்களில் இணைந்து சமூகத்தில் ஒரு அங்கமாக மாறுதல்.
இறுதியாக, சிறு வியாபாரங்களுக்கு மூலோபாய திட்டமிடல் ஒரு முக்கியமான செயல்முறையாக காணப்படுகின்றது. இது வெற்றிக்கான வழிமுறையாகும். தெளிவான நோக்குடன், தீர்மானமிக்க இலக்குகளை வரையறுத்தல், சதுார்யமான முடிவுகள் மற்றும் குறிக்கோள்களை உருவாக்குதல் மற்றும் பிரயோசனமான வியூகங்களை கையாள்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்தல் சிறு வியாபாரங்கள் செழித்தோங்குவதற்கும் அவை போட்டித்தன்மை கொண்ட சந்தையில் வளர்வதற்கும் உதவும். மூலோபாய திட்டமிடல் ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்பதை நினைவில் வைப்பதோடு மாற்றம் பெறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுவதும், தொடர்ந்து முன்னேற வேறு வியூகங்களை அவ்வப்போது மறு ஆய்வு செய்வதும் அவசியமானதாகும்.
Content Provided by Content Commune -the.content.commune@gmail.com