சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (சி.ந.நி) இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வணிகங்கள் வேலைவாய்ப்பு உருவாக்குதல், வருமானம் ஈட்டுதல், மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. எவ்வாறாயினும் மற்ற வணிகங்களை போலவே, இலங்கையில் காணப்படும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நிதி சேவைகளை நாடுதல் அவற்றின் வெற்றிகரமான தொழிற்பாட்டுக்கு அத்தியாவசியமாகின்றது. ஆகையால் அடிப்படை வங்கியியல் நடைமுறைகள் இவ்வணிகங்கள் திறம்பட செயல்படுவதற்கும் செழித்து வளர்வதற்கும் முக்கியமானதாகின்றன. இவ் ஆக்கத்தில் இலங்கையில் காணப்படும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை வங்கியியல் நடைமுறைகளை ஆராயலாம்.
முதன்மையாக, இலங்கையில் காணக்கூடிய எந்தவொரு சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் வங்கி கணக்கொன்றை திறப்பது ஓர் முக்கிய படிமுறையாகும். இவ் வங்கி கணக்கினூடாக வணிகங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து இலகுவாக கட்டணங்களை அறவிடல், வழங்குநர்களுக்கு கட்டணங்களை செலுத்துதல், மற்றும் காசுபுரள்வை பயனுறுதியுடன் முகாமை செய்தல் போன்ற நன்மைகளை பெற முடிகிறது. பெரும்பான்மையான வங்கிகள் வாடிக்கையாளர் நோக்கங்களுக்கு அமைய பல்வேறு வகையான வங்கி கணக்குகளை வழங்குகின்றன. இவற்றுள் சேமிப்பு கணக்குகள், நடைமுறை கணக்குகள், மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் உள்ளடங்குகின்றன. வணிகத்தின் தேவைகள் மற்றும் நிதி இலக்குகளுக்கு மிகவும் பொருத்தமான ஒரு கணக்கு வகையை தெரிவு செய்வது முக்கியமானதாகும். உதாரணமாக, ஓர் வணிகம் அன்றாடம் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபடும் எனில், சேமிப்பு கணக்கை விடவும் நடைமுறை கணக்கு பொருத்தமானதாக இருக்கும்.
வங்கி கணக்கு திறக்கப்பட்டதும், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அக்கணக்கை பயனுறுதியுடன் கையாள்வதை உறுதி செய்ய வேண்டும். அந்நிறுவனங்கள் இணைய முறை வங்கியியல், கைபேசி வங்கி செயலி போன்றவற்றை பயன்படுத்தி பரிவர்த்தனைகளை விரைவாகவும் வினைத்திறனுடனும் மேற்கொள்ள வேண்டும். மேலதிகமாக, இந்நிறுவனங்கள் மிகை பற்றுகள் மற்றும் தேவையற்ற கட்டணங்களுக்கு முகம்கொடுப்பதை தவிர்த்து கொள்ள கணக்கு மிகுதிகள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகளை அன்றாடம் கண்காணிக்க வேண்டும். இலங்கையில் காணப்படும் வங்கிகள் கணக்கு செயல்பாட்டைக் கண்காணிக்க அறிவிப்புகள் மற்றும் விழிப்பூட்டல் சேவைகளை வழங்குகின்றன. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இச்சேவைகளுக்கு பதிவு செய்வதன் மூலம் அன்றாட பரிவர்த்தனைகளை கண்காணித்து கொள்ள முடியும்.
இரண்டாவதாக, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தமது நிதியை திறம்பட நிர்வகிக்க சரியான பதிவுகளை பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும். சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பற்றுசீட்டுகள், பட்டியல்கள், மற்றும் வங்கி கூற்றுகள் உள்ளடங்கலாக அனைத்து பரிவர்த்தனைகளின் பதிவுகளையும் பராமரிக்க வேண்டும். இப்பதிவுகள் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தமது வருமானங்கள் மற்றும் செலவுகளை கண்காணிக்க உதவுவதோடு கிரயங்களை குறைத்துக்கொண்டு வருமானத்தை அதிகரிக்க கூடிய வழிமுறைகளை இனங்காணவும் உதவுகின்றன. இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் தொழிற்படும் வங்கிகள் வங்கி கூற்றுகளின் மெந்நகல்களை மின்னஞ்சல் மூலமாக விநியோகிக்கின்றன. இந்த நடைமுறையானது வணிகங்களின் சரியான பதிவுகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. மேலும், வணிகங்கள் வங்கி கடன்கள் அல்லது பிற நிதிச் சேவைகளுக்கு விண்ணப்பிக்கும்போது வங்கிகள் மேற்கூறிய நிதி பதிவுகளை கோருகின்றன. இதனால் சரியான தரவுகளை பராமரித்தல் மேற்கூறிய வங்கி சேவைகளை பெற்றுகொள்வதின் வாய்ப்புகளை அதிகரிப்பதில் பங்களிக்கிறது.
மூன்றாவதாக, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தமது வழங்குநர் மற்றும் பிற கடன்கொடுத்தோர்களுக்கு சரியான நேரத்தில் கட்டணங்களை செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். தாமத செலுத்துகை வணிகர்களின் நன்மதிப்பை பாதிப்பதோடு தாமத வட்டி மற்றும் தண்டப்பணம் போன்ற மேலதிக கிரயங்களுக்கு வழிவகுக்கும். ஆகவே, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தமது காசுபுரள்வை பயனுறுதியுடன் முகாமை செய்து கட்டணங்களை சரியான நேரத்தில் செலுத்துதல் இன்றியமையாததாகின்றது. இலங்கையில் உள்ள வங்கிகள் இணைய வங்கியியல், கைபேசி வங்கி செயலி மற்றும் காசோலை கொடுப்பனவுகள் போன்ற பல்வேறு கட்டண வசதிகளை வழங்குகின்றன. இவை சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வழங்குநர்கள் மற்றும் கடன்கொடுத்தோர்க்கு பணம் செலுத்த பயன்படுத்தலாம்.
நான்காவதாக, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தமது வணிக நடவடிக்கைகளுக்கு நிதி முதலீடு செய்கையில் வங்கிகளிடம் இருந்து கடன் வசதிகள் பெறுவதில் அக்கறை செலுத்த வேண்டும். மேலதிக பற்று, கடன்கள், மற்றும் கடனட்டைகள் போன்ற கடன் வசதிகள் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தமது காசுபுரள்வுகளை முகாமை செய்து முன்னேற்ற வாய்ப்புகளில் முதலீடு செய்வதில் உதவி புரிகின்றன. எவ்வாறாயினும் கடன் வசதிகளுக்கு விண்ணப்பிக்கும் முன் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தமக்கு திடமான வணிக திட்டம், சாதகமான கடன் வரலாறு, மற்றும் சாதகமான காசு பாய்ச்சல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளல் வேண்டும். மேலும், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வட்டி வீதங்களையும் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் ஏனைய வங்கிகளுடன் ஒப்பிட்டு தமது வணிக தொழிற்பாட்டுக்கு பொருத்தமான சிறந்த கடன் வசதியை தெரிவு செய்ய வேண்டும்.
இறுதியாக, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தமது வங்கியுடன் சிறந்த உறவை பேணுவதை முதன்மைபடுத்தி கொள்ள வேண்டும். வங்கிகளுடன் சிறந்த உறவுமுறையை பேணுவதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும். நிதி ஆலோசனைகளை பெறல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட நிதி தீர்வுகள் பெறல் ஆகியன அவற்றுள் சில ஆகும். சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சிறந்த நிதி பதிவுகளை பேணுதல், உகந்த நேரத்தில் கட்டணங்களை செலுத்தல், மற்றும் வங்கிகளுடன் தொடர்ந்து தொடர்புகளை பேணுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் தமது வங்கியுடன் சிறந்த உறவுமுறைகளை வளர்த்துக்கொள்ள முடியும். மேலும், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல்வேறு வங்கி நிரல்கள் மற்றும் வங்கிகள் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முன்னேற்றத்துக்காக முன்னெடுக்கும் முயற்சிகள் ஆகியவற்றில் பங்குபற்றி வணிகத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல முடியும்.
இந்த உள்ளடக்கமானது CeFEnI/COSME இன் உதவியுடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்டதாகும்.