பெரும்பாலான வணிகங்களுக்கு பணியாளர் விலகிச் செல்வது ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சனை என்பது உங்களுக்குத் தெரியுமா? பொருளாதார ஆய்வுகள் சில தொழில் துறைகளுக்கு விலகிச் செல்லும் ஊழியருக்குப் பதிலாக பொருத்தமான ஒருவரைக் கண்டறியவும், பயிற்சியளிக்கவும் மற்றும் பணியில் அமர்த்தவும் ஒரு பணியாளரின் ஆண்டு சம்பளத்தில் ஐந்தில் ஒரு பங்கு வரை செலவாகும் என்று கூறுகிறது. அதனால்தான் உங்கள் சிறந்த ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவது உங்கள் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகக் கருதப்பட வேண்டும்.
காலப்போக்கில் சில ஊழியர்கள் பல்வேறு காரணங்களுக்காக நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்யலாம் அல்லது வெளியேற வேண்டும் என்பது வாழ்க்கையின் யதார்த்தம். எவ்வாறாயினும், வழக்கத்திற்கு மாறாக அதிக விலகல் வீதம், அவர்கள் நிறுவனத்தில் இருக்கும்போது அவர்கள் மீதான உங்கள் முதலீடுகள் வீணாகிப் போனதாகக் கருதப்படும் அபாயத்தில் உள்ளது. மிக அதிக பணியாளர் விலகல் என்பது ஒரு நிறுவனமாக நீங்கள் விரும்பும் கடைசி விடயமாக இருக்கலாம். இது உங்கள் செலவுகளை அதிகரிப்பதுடன், நிறுவனத்தின் நற்பெயரையும் பாதிக்கலாம். இருப்பினும், அதிக விலகலுக்கான தீர்வு உங்கள் பணியாளர்களில் முதலீடு செய்வதை நிறுத்துவது அல்ல. ஊழியர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக வீதத்தில் விலகிச் செல்வதற்கான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களைக் கண்டறிந்து உரிய தீர்வு காண்பதே இதற்கான தீர்வாகும்.
நீங்கள் நினைப்பது போல் இது கடினமானது அல்ல. நிஜ வாழ்க்கை அனுபவத்திற்கு இதைப் பயன்படுத்துவோம்.
உங்கள் நிறுவனத்தின் வாகன ஓட்டுநரின் வேலை விபரத்தைப் பார்ப்போம். உங்கள் பெரும்பாலான பணியாளர்கள் இருக்கும் இடத்தைப் பற்றிய ஒவ்வொரு சிறிய விபரத்தையும் அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். மேலும், உங்கள் பெரும்பாலான ஊழியர்கள் ஒன்றாகப் பயணம் செய்யும் போது அலுவலக வாகன ஓட்டுநருடன் பேசிப் பழகுவார்கள். அவர் உங்கள் நிறுவனத்திற்கு மிகுந்த உணர்வின் அடிப்படையில் முக்கியமான சொத்தாக கருதப்படலாம். ஆனால் அவருடைய இன்னல்களை நீங்கள் எவ்வளவு சிறப்பாகக் கையாளுகிறீர்கள்? நிறுவனத்திற்குள் அவருடைய பங்களிப்பின் மதிப்பு என்ன?
இங்குதான் நீங்கள் உங்கள் ஈடுபாட்டை வெளிப்படுத்தல் வேண்டும். ஒவ்வொரு சிறிய பணியும் மாற்றத்திற்கு வித்திடுவதுடன் மற்றும் உங்கள் இலக்குகளை அடைய உதவுகிறது. அவரை திருப்தியாக வைத்திருப்பதில் செலுத்தப்படும் கவனம், அவருக்கு சிறந்த சம்பளத்துடன் வேறு சிறந்த வேலை கிடைத்தாலும், அவர் விலகிச் செல்லும் முன்னர் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பார் என்பதை உறுதி செய்யும்.
உங்கள் பணியை எளிதாக்க கீழே உள்ள உதவிக்குறிப்புகள் உதவியாக இருக்கும்.
- உங்கள் நிறுவனத்திற்கும் பணிச்சூழலுக்கும் சிறந்த மற்றும் மிகவும் பொருத்தமான நபர்களை ஆட்சேர்ப்பு செய்யவும்
சிறந்த மனிதவள தீர்மானங்கள் சரியான திறமையாளர்களை ஈர்க்கும் மற்றும் தேர்ந்தெடுக்கும் புள்ளியில் இருந்து ஆரம்பிக்கின்றன. இது மாத்திரமே ஒட்டுமொத்தமாக சிறந்த விளைவுகளை ஏற்படுத்த முடியும். ஆட்சேர்ப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஏனென்றால் நிறுவனத்தின் சூழலுக்கு ஏற்றவாறு மற்றும் அதனை அனுபவிக்கக்கூடியவர்களை நீங்கள் பணியமர்த்துவதை உறுதிசெய்வது, பின்னணி மற்றும் தகுதிகாண் சோதனை செய்யாமல் நீங்கள் பணியமர்த்துபவர்களை விட நீண்ட காலம் நிறுவனத்தில் இருப்பதை உறுதி செய்யும்.
- நியாயமான ஊதியம் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்குங்கள்
வாய்ப்புகள், ஈடுபாடு மற்றும் சவாலான வேலை மற்றும் இனிமையான பணிச்சூழலில் கவனம் செலுத்துவது என, வசதியான வாழ்க்கையை வாழ்வது மற்றும் அதற்கேற்ப ஊதியம் பெறுவது பற்றி அவர்கள் நினைப்பதால், சிறந்த ஊதிய வரப்பிரசாதங்கள் பணியாளர் விலகிச் செல்வதைக் குறைப்பதற்;குச் சமம் என்று கூறப்படுகிறது. நிறுவனத்தின் தரப்பிலிருந்து நீங்கள் வழங்கும் காப்புறுதி மற்றும் பிற நன்மைகளும் இதில் அடங்கும். மனித இயல்பு இங்கே உங்களுக்கு சாதகமாக உள்ளது. ஏனெனில் பல ஊழியர்கள் சம்பளம் சமமாக இருந்தாலும் அல்லது அதிகமாக இருந்தாலும், அவர்கள் தற்போது இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாக இருக்கும்போது முற்றிலும் புதிய சூழலுக்குச் செல்லும் அபாயத்தை விரும்பமாட்டார்கள்.
- உங்கள் பணியாளர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களுக்கு ஒரு அர்த்தத்தையும், நோக்கத்தையும் வழங்குங்கள்
நீங்கள் பல திறமையான நபர்களில் சிறந்த விண்ணப்பதாரியை நியமித்து பணியமர்த்துகிறீர்கள். எனவே அவர்கள் உங்கள் நம்பிக்கைக்கு தகுதியானவர்கள் மற்றும் ஒரு நோக்கம் மற்றும் தெளிவான இலக்கை நோக்கி அவர்களை வழிநடத்தும் அதே வேளையில் அவர்களுக்கு சுதந்திரமாக செயல்பட இடம் கொடுக்க நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். இது மறைமுகமாக அவர்களின் திறன்கள் மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ள இடமளிக்கும். மேலும், எந்தவொரு நபரும் தங்களுக்கு போதுமான சுயாட்சி வழங்கப்பட்டு மற்றும் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கப்பட்டால், அவர்கள் தமக்கு சிறப்பாகக் கருதும் வகையில் தங்கள் வேலையைச் செய்ய நினைப்பார்கள். வேறொரு நிறுவனத்திடமிருந்து ஒரு வேலை வாய்ப்பை ஏற்கலாமா அல்லது உங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் போது அவர்கள் கவனிக்கும் மற்றொரு காரணி தனிப்பட்ட வளர்ச்சியாகும்.
- ஊழியர்கள் மீது மரியாதை காட்டுங்கள்
சிந்திக்கவும், புத்தாக்கத்திற்கும், அவர்களின் சிந்தனைகளைப் பயன்படுத்தவும் அவர்களுக்கு இடம் கொடுங்கள். அவர்களை ஒருபோதும் கேலி செய்யவோ அவமானப்படுத்தவோ கூடாது. நீங்கள் அவர்களை மதிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதன்மூலம், அவர்கள் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த அங்கம் என்றும், நிறுவனம் பயன்படுத்தக்கூடிய மற்றும் அப்புறப்படுத்தக்கூடிய மற்றொரு சொத்து அல்லது மோசமான பொறுப்பு அல்ல என்றும் அவர்களை உணர வைப்பீர்கள். அவர்களும் நேரம் தேவைப்படும் மனிதர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இடைவேளை மற்றும் ஓய்வு, முறையான சுகாதார வசதிகள் மற்றும் அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை எதிர்மறையாக பாதிக்காத சரியான பணிச் சூழல்கள் அவர்களுக்கு தேவை.
- வேலை-குடும்ப வாழ்க்கை சமநிலையை பேண பணியாளர்களுக்கு உதவுங்கள்
வேலை-குடும்ப வாழ்க்கை சமநிலையைப் பேணுவது ஆரோக்கியமான பணியாளர்களுக்கு இன்றியமையாதது. சில ஊழியர்களின் உந்துதல் சம்பளம் போன்ற பண வடிவங்களாக இருக்கலாம், ஆனால் சிலருக்கு (வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், கிட்டத்தட்ட அனைவருக்கும்), வேலை-குடும்ப வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தும் திறன் வேலையின் மிக முக்கியமான அம்சமாக இருக்கலாம். நீங்கள் உங்கள் வணிகத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும்போது இதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணராமல் இருக்கலாம். ஏனெனில் இலாபமே முதன்மையான அக்கறையாக இருக்கும். எவ்வாறாயினும், ஒவ்வொருவரும் நியாயமான வேலை-குடும்ப வாழ்க்கை சமநிலையை அனுபவிக்க முடியும் என்பதை நீங்கள் விரைவில் உறுதிசெய்தால், உங்கள் சிறந்த பணியாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும்.
இந்த உதவிக்குறிப்புகள் தக்கவைப்பை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் வணிக வெற்றிக்கான திறவுகோல்களான திருப்தியை முன்னெடுக்கும் போது வேலையில் உற்பத்தித்திறன் மற்றும் படைப்பாற்றலையும் மேம்படுத்தும்!