வீட்டிலிருந்து பணிபுரியும் செயற்பாடானது உற்பத்தி திறனை ஊக்குவிப்பது போலவே கவனச்சிதறல்களையும் ஏற்படுத்தக்கூடும். நீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் காலங்களில் அதிக கவனத்துடன் வேலை செய்தாலும் நேர நிர்வாகம் மற்றும் எவ்வாறு உங்கள் பொழுது கழிந்தது என்பது பற்று ஆச்சரியமாக இருக்கும். உங்களது அன்றாட தனிப்பட்ட பிரத்தியேக வாழ்க்கையுடன் கூடிய நிலையில் வீட்டிலிருந்து செய்யும் கால கட்டத்தில் தனிப்பட்ட, குடும்ப வேலைகளையும்> பணியிட வேலைகளையும் சேர்த்து ஒரு சேர செய்வதனால் ஏற்படும் கவனச் சிதறல்கள் உங்களைத் திசை திருப்பக் கூடும். இதனால் உங்கள் வேலையின் தரமும் அன்றைய நாளில் நீங்கள் செய்த வேலையின் அளவும் பாதிக்கப்படலாம். எனவே வீட்டில் இருந்து வேலை செய்யும் காலத்தில் உங்கள் நாளாந்த பணிகளை தினந்தோறும் நிர்வகிப்பதற்கான சில எளிய திட்டமிடல் மற்றும் நிர்வகிப்பதற்கு உதவும் நடைமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.
வீட்டிலிருந்து பணிபுரியும் கால அட்டவணை அவசியம்
நீங்கள் வீட்டிலிருந்து பணியாற்றும்போது நாளாந்தம் அல்லது வாரத்தின் ஆரம்பத்தில் ஒரு கால அட்டவணையை தயாரித்து யார் யார் எந்த வேலையை எப்போது செய்யப்போகின்றீர்கள் என்பதை திட்டமிடுங்கள். குடும்பக் கடமைகளை பகிருதல், குழந்தை பராமரிப்பை முன்னெடுப்பது எவ்வாறு? என்பது பற்றி குடும்ப அங்கத்தவர் உடன் கலந்தாலோசித்து தீர்மானியுங்கள். அதன் பின் உங்கள் கால அட்டவணையை கூகுள், டைம் ட்ரீ போன்ற நினைவு காட்டிகள் பயன்படுத்தியோ அல்லது தெளிவாக எழுதி பார்வைக்கு தென்படும் குளிர்சாதன பெட்டி போன்ற பொதுவான ஒரு இடத்தில் காட்சிபடுத்துங்கள். இது உங்கள் வேலையை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்வதற்கும் பின்பற்றுவதற்கும், நிர்வகிப்பதற்கு உதவியாக இருக்கும். உங்கள் நிறுவனம் அனுமதித்தால் விண்டோவ்டு வொர்க் எனப்படும் வேலையை தொகுதி பிரித்து செய்யும் முறையினையும் கையாளலாம். இதன் மூலம் நாம் பணியிடத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செய்யும் வேலைக்கு மாறாக வியாபாரம், அதன்தன்மை மற்றும் தேவைக்கேற்ப நேரத்தை திட்டமிட்டு செயல்படலாம் .
அலுவலக பணிகளை செய்வதற்கு வீட்டில் தனி இடத்தை வைத்திருங்கள்
வீட்டிலிருந்து பணியாற்றும்போது அதற்காக ஒரு தனிப்பட்ட வேலை இடத்தை உருவாக்குவதன் ஊடாக வீட்டுப் பணிகளில் இருந்து உங்களை விடுவித்து, உங்கள் அலுவலக பணிகளில் அதிக கவனம் செலுத்த முடியும். இதன் மூலம் வீட்டு அன்றாட நிகழ்வுகள், வீட்டில் இடம்பெறும் உரையாடல்கள், சப்தங்கள் போன்றவற்றால் ஏற்படக்கூடிய கவனச்சிதறல்களை தவிர்த்துக் கொள்ளலாம். நீங்கள் வேலைக்கு என்று ஒதுக்கப்பட்ட ஒரு தனி இடத்தில் இருந்து வேலை செய்யும் பொழுது உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி வேலையில் கவனம் செலுத்த கூடியதாக இருக்கும். இவ்வாறாக செயற்படுவதன் மூலம் உங்கள் மூளை வீட்டு வேலைகளிலிருந்து விடுபட்டு அலுவலக பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் என்பதை உணர்ந்து செயற்படும். உங்கள் படுக்கை மற்றும் பிற தனிப்பட்ட இடங்களிலிருந்து வேலை செய்வதை இயலுமான வரை தவிர்க்கவும். ஏனெனில் இத்தகைய ஒழுங்கற்ற செயற்பாடுகள் உங்கள் வாழ்க்கை சமநிலையை பாதிப்பதோடு உற்பத்தித்திறனில் தாக்கத்தையும் ஏற்படுத்தககூடும்.
ஒரே நேரத்தில் பல பணிகளில் ஈடுபடுவதையும் உங்கள் தனிப்பட்ட வேலைகளில் கவனம் செலுத்துவதையும் தவிருங்கள்
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதன் மூலம் உங்களால் நேரத்தை மீதமாக்க முடியும் என நீங்கள் நினைத்தாலும் இது கவனச் சிதறலுக்கு வழிவகுக்கின்றது. ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு நாம் மாறி அதில் கவனம் செலுத்துவதற்கு மனித மூளைக்கு குறைந்தது 15 நிமிடங்கள் தேவைப்படுகின்றது. நாம் இரண்டோ அல்லது அதிகப்படியான பணிகளை ஒரே நேரத்தில் செய்யும்பொழுது கவனச் சிதறல்கள் ஏற்பட்டு அது உற்பத்தித்திறனை பாதிக்கலாம். எனவே ஒரு நேரத்தில் ஒரு பணியில் கவனம் செலுத்தி அதனை நிறைவு செய்த பின்னர் மற்றைய வேலை மீது கவனம் செலுத்துங்கள். இதன் மூலம் கவனச் சிதறல்கள், தவறுகளை தவிர்த்து விரைவாகவும் துல்லியமாகவும் செயல்பட முடியும். வீட்டில் இருந்து வேலை செய்யும் நேரத்தில் தனிப்பட்ட வீட்டு வேலைகளில் அல்லது வேறு பணிகளில் ஈடுபடுவது மிகப்பெரிய குறைபாடாகும். நாம் வீட்டிலிருந்து பணியாற்றும் அதேநேரம் சமையல் வேலைகள், வீட்டு கொள்வனவு, கொடுப்பனவு செலுத்துதல்>வீட்டு வேலைகள், துப்பரவு வேலைகள் மற்றும் செல்லப்பிராணிகளை கண்காணிப்பது போன்றவற்றை செய்ய முற்படுகிறோம். உண்மையிலேயே நாம் அலுவலகத்தில் வேலை செய்யும் நேரத்தில் இவ்வாறு செயற்பட மாட்டோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே வீட்டில் இருந்து வேலை செய்யும் காலகட்டங்களில் நாம் அலுவலகத்தில் கடைப்பிடிக்கும் அதே வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தவிர்க்கமுடியாத சொந்த வேலைகள் வரும் பட்சத்தில் நீங்கள் அதனை பணியிடத்திற்கு தெரிவித்து தேவையான நேரத்தை ஒதுக்கி அதன்பின் உங்கள் பணியைத் தொடங்கலாம்.
நீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் காலங்களில் மேற்குறிப்பிட்ட அணுகுமுறைகளை முயற்சிப்பதன் மூலம் திருப்திகரமான செயற்றிறன் மிக்க வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையைப் பேணலாம்.