நிர்வகித்தல் என்பது ஒரு அணியை உற்பத்தித்திறன் ரீதியாகவும், தொடர்ச்சியாகவும் செயல்பட வைப்பதற்கான மற்றும் அதை அப்படியே வைத்திருக்கும் கலை மற்றும் கைவினை. இது ஆட்சேர்ப்பு, பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் பணியை விட்டு நீக்குதல், பாதீடு, திட்டமிடல், ஒழுங்கமைத்தல், சிக்கல்களை போக்குதல், முகாமைத்துவ கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பயன்படுத்துதல், சொத்துக்களை நியாயமான முறையில் நியமித்தல் மற்றும் செயல்திறன் தொடர்பான மதிப்பீட்டுக் கருத்துக்களை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. முகாமைத்துவம் என்பது தலைமைத்துவத்தின் இன்றியமையாத அங்கமாகும்.
முகாமையாளர்களின் பங்கு பல அடிப்படைப் பொறுப்புகளைச் சுற்றியுள்ளது, அவை பல பிற பொறுப்புகளுக்கும் பன்முகப்படுகின்றன. முகாமையாளர்களின் நான்கு அடிப்படைப் பொறுப்புகள்/பணிகளைப் பார்ப்போம்.
- திட்டமிடல்: இது முகாமையாளர்களின் குறிப்பிடத்தக்க பொறுப்பாகும். நிறுவனத்தின் நீண்ட கால மற்றும் குறுகிய கால நோக்கங்கள் என்ன என்பதையும் அவற்றை எவ்வாறு அடைவது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது கண்டுபிடிக்க வேண்டும். இது செயல்பாட்டின் அனைத்து பகுதிகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் மீண்டும் மீண்டும் செய்யப்படும் செயல்முறையாகும். ஏனெனில் அத்தகைய திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் உள் மற்றும் வெளிப்புற காரணிகளின் அடிப்படையில் தொடர்ச்சியான மாற்றத்திற்கு உட்பட்டவை. நீங்கள் ஒரு தொழில் முயற்சியாளராக இருந்தால், நிறுவனத்தில் முதன்மையாக முடிவெடுப்பவர் நீங்களே, இது அடிப்படையில் உங்களுக்கு சுமையாக மாறும். இருப்பினும், உங்களுக்கு கீழே முகாமையாளர்கள் இருந்தால், திட்டமிடும் செயல்பாட்டில் அவர்களை ஈடுபடுத்துவதும், திட்டமிடும் திறனை வளர்ப்பதற்கு அவர்களுக்கு உதவுவதும் உங்கள் நிறுவனத்தின் நலனுக்கு சிறந்தது. நீங்கள் திட்டமிடத் தவறினால், நீங்கள் தோல்வியடையத் திட்டமிடுகிறீர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
- ஒழுங்கமைத்தல்: இது உச்சபட்ச வளப் பயன்பாட்டை அடைவதைப் பற்றியது. ஒழுங்கமைக்கும்போது, ஒரு முகாமையாளர் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்குத் தேவையான வளங்கள் மற்றும் அவற்றின் சரியான ஒதுக்கீடு ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். நிறுவனத்தின் வெற்றிக்கு அவசியமான மனித வளங்கள் மற்றும் அவற்றின் வலுவூட்டல் ஆகியவற்றை சீரமைப்பதன் மூலம், நிறுவனத்தின் / அணியின் கட்டமைப்பை அமைப்பதோடு இது இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் வணிகத்திற்காக நீங்கள் ஒரு புதிய விற்பனை மையத்தைத் திறக்கப் போகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அவ்வாறெனில், ‘ஒழுங்கமைத்தல்’ என்பது, நிதி ஒதுக்கீடு செய்தல், கட்டட இட வசதியைப் பெறுதல், பணியாளர்களை தெரிவு செய்து, பொறுப்புகளை வழங்குதல், அலுவலக வசதிகளை ஏற்படுத்தல் போன்றவை.
- வழிநடத்தல்: இது திட்டத்தை செயல்படுத்துவதையும், திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு வளங்களை வழிநடத்துவதையும் குறிக்கிறது. ஒரு நிறுவன சூழலில், ‘வழிநடத்தல் செயல்பாடு’ என்பது தெளிவான (மற்றும் அடிக்கடி இடம்பெறும்) தொடர்பாடல், அணியை ஊக்குவிப்பது மற்றும் பிணக்குகளைத் தீர்ப்பது போன்ற பல நுட்பமான திறன்களை உள்ளடக்கியது. தலைமை தாங்கும் போது, ஒரு முகாமையாளர் தனது துணை அதிகாரிகளுக்கு அல்லது தனக்கு கீழே உள்ளவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும், இது அவர்கள் தன்னாட்சி முறையில் செயல்பட உதவுகிறது. மேலே உள்ள புதிய விற்பனை மைய உதாரணத்திற்கு திரும்புவோம். அதன் செயல்பாட்டைக் கவனிக்க நீங்கள் ஒரு விற்பனை மைய முகாமையாளரை நியமிக்கிறீர்கள் என்றால், அவருடைய பொறுப்புகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நீங்கள் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். மேலும், அவருக்கு சொந்தமாக சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும், ஏனெனில் உங்களுடன் எந்நேரமும் கலந்தாலோசிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது.
- கட்டுப்படுத்துதல்: கட்டுப்பாடு என்பது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுடன் ஒப்பிடும் போது உண்மையான பெறுபேறுகளின் மதிப்பீடு ஆகும், அதன் மூலம் நிறுவனம் அதன் இலக்கின் போக்கில் செல்ல உதவுவதற்கு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமளிக்கிறது. இந்த வார்த்தை குறிப்பிடுவது போல், ஏற்படுத்தப்பட்ட இலக்கு, அல்லது செலவுக் குறைப்பு அல்லது முகாமைத்துவ நிர்வாகத்திலிருந்து விலகல்களை ஊக்கப்படுத்தாது விடுவது என்று அர்த்தமல்ல. கட்டுப்பாட்டுச் செயல்பாடு, திட்டங்களில் இருந்து விலகல்களை அனுமதிக்கும் தீர்மானத்தைப் பயன்படுத்துதல் அல்லது பாதீடு மற்றும் செலவுகளில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்துக்கொள்ளல் என நீங்கள் நிறுவனத்தை அதன் இறுதி இலக்குகளை நோக்கி வழிநடத்தும் போது அத்தகைய தீர்மானங்களையும் எடுக்க வேண்டி வரும். எங்கள் விற்பனை மையம் தொடர்பான எடுத்துக்காட்டில், தினசரி சராசரி தேறிய இலாபம் ரூபா. 5,000.00 இலக்கினை எதிர்பார்க்கும் நிலையில், முதல் மூன்று மாதங்களில் அது சராசரியாக ரூபா 2,000.00 மாத்திரமே வருமானமாகக் கிடைத்தால், உங்கள் விளம்பர நடவடிக்கைகளை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். இதேபோல், உங்கள் மின்சாரக் கட்டணம் அதிகமாக இருந்தால், நீங்கள் மின் விளக்குகளை எரிசக்தி-திறனுள்ள சாதனங்களுடன் (CFL, LED போன்றவை) மாற்றலாம். அதனால்தான் கட்டுப்படுத்துவது ஒரு தொடர்ச்சியான செயல்பாடாக இருக்க வேண்டும், ஏனெனில் தவறு நடந்த விடயங்களில் உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆண்டின் இறுதி வரை காத்திருந்தால் அது சற்று தாமதமாகலாம் என்பதுடன் நிலைமை கைமீறிப் போகலாம். PDCA (Plan, Do, Check, Action) Cycle பற்றி மேலும் வாசித்து அறிந்து கொள்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் காண்கின்றவாறு, முகாமையாளர்களின் செயல்பாடுகள் பன்முகப்பட்டவை மற்றும் வேறுபட்டவை. ஒரு சர்க்கஸில் உள்ள “சுழலும் தட்டு” போல ஒரு முகாமையாளரின் பங்கு நன்றாக இருக்க வேண்டும். முகாமையாளரின் பொதுவான பொறுப்புகளின் தொகுப்பை நாங்கள் கீழே பட்டியலிட்டுள்ளோம் (நிறுவனம் மற்றும் நிர்வாகப் பாத்திரத்தைப் பொறுத்து, இவை மாறுபடலாம்).
- புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்
- புதிய பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல்
- துற்போது இருக்கும் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல்
- முடிவெடுத்தல் மற்றும் பிரச்சனை தீர்வுக்கு உதவுதல்
- செயல்திறனைக் கண்காணித்தல் மற்றும் அவற்றை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்தல்
- பாதீட்டைக் கட்டுப்படுத்துதல்
- சரியான நேரத்தில் செயல்திறன் மதிப்பீடுகளை நடத்துதல்
- எதிர்காலத்திற்கான ஒரு நிறுவனத்தின் இலக்குகளைத் திட்டமிடுதல் மற்றும் ஏற்படுத்தல்
- சிரேஷ்ட முகாமைத்துவத்திற்கு அறிக்கையிடுதல்
சிறந்த முகாமையாளர்கள் தங்கள் பணிகள் தங்கள் நிறுவனங்களின் பணிகள் மற்றும் அவற்றின் செயல்திறனைப் பற்றியதேயன்றி, தங்களைப் பற்றியது அல்ல என்பதை புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் தங்கள் அணிகளின் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், சக ஊழியர்களின் வெற்றிகளைப் பாராட்டவும் முயற்சி செய்கிறார்கள். எனவே, உங்களால் சிறந்த முகாமையாளராக இருக்க முடியுமா?