இலங்கை மக்கள் புதிய வியாபாரங்களை ஆரம்பிக்க அதிக ஆர்வம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். ஆனால் இதற்காக எவ்வளவு ஆராய்ச்சி முன்னமேயே செய்யப்படுகின்றது? இலங்கையின் தொழிலதிபர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் அடங்கலாக தொடக்க நிறுவனங்கள் ஒரு வியாபாரத்தினை ஆரம்பிக்கும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றினை நோக்குவோம்.
சந்தை ஆய்வு:
- இடைவெளியை அடையாளம் காண்தல்: உங்கள் வியாபாரம் என்ன சிக்கலை தீர்க்க முடியும், அல்லது அது என்ன தேவையை பூர்த்தி செய்ய முடியும்? உங்கள் தயாரிப்பு அல்லது சேவைக்கு தேவை உள்ளதா? உங்கள் இலக்கு வாடிக்கையாளர்களையும் அவர்களின் தேவைகளையும் அறிவது அவசியம். உதாரணமாக, உங்கள் வியாபாரம் அதிக செலவு செய்யக் கூடிய பகுதியில் காணப்படுகின்றது எனில், அங்கே காலணி திருத்தும் வியாபாரம் சரியாக இடம்பெறுமா?
- போட்டியாளர்கள் குறித்த பகுப்பாய்வு: உங்கள் போட்டியாளர்கள் யார்? அவர்களின் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன? அவர்களில் இருந்து உங்களை எப்படி தனித்துவமாகக் காட்டுவது? அதாவது- நீங்கள் மின்-விளக்கு சாதனங்களை விற்பனை செய்கிறீர்கள் என்றால், உங்கள் பொருட்கள் எந்த வகையில் தனித்துவமானது? அது விலை அடிப்படையிலா அல்லது தரத்தின் அடிப்படையிலா தனித்துவம் பெறுகின்றது? குறிப்பிட்ட பகுதியில் இதேபோன்ற வியாபாரங்கள் தொடங்கப்பட்டு அவை செயற்படாமல் போயிருக்கின்றதா? போன்ற விடயங்களை கருதி அதற்கான காரணங்களை இனம்கண்டு விடயங்களை சிறப்பாக கட்டமைக்க வேண்டும்.
- தொழில் களநிலைமைகள் (Industry Trends): உங்கள் தொழில்துறையின் தற்போதைய கள நிலைமைகள் என்ன? உங்கள் வியாபாரத்தினை பாதிக்கக்கூடிய ஏதேனும் விதிமுறைகள் அல்லது மாற்றங்கள் உள்ளதா? அதாவது நீங்கள் எதையாவது இறக்குமதி செய்ய திட்டமிட்டால் குறிப்பாக இறக்குமதிக்கு அதிக வரி செலுத்த வேண்டி இருந்தால், நீங்கள் ஏனைய விற்பனையாளர்களுடன் போட்டியிட முடியாது.
- இடம் மற்றும் வாடிக்கையாளர்கள் – நீங்கள் எங்கே விற்க வேண்டும்? ஒன்லைன் மூலமாக அல்லது கடை மூலமாகவா? அது கடையாக இருந்தால், உங்கள் கடை ஆர்வம் ஏற்படுத்தும் இடத்தில் அமைந்துள்ளதா? குறிப்பிட்ட பகுதியில் உள்ளவர்கள் உங்கள் தயாரிப்பை வாங்கும் நிலையில் காணப்படுகின்றார்களா? உதாரணமாக உயர்தரமிக்க வடிவமைப்பாளர் கைப் பைகள் (High-End Designer Hand Bags) குறைந்த வருமானம் பெறும் மக்கள் வசிக்கும் பகுதியில் பொருத்தமானதாக இருக்காது.
வியாபார திட்டமிடல்:
- வியாபார மாதிரி: உங்கள் வியாபாரம் எவ்வாறு வருவாயை உருவாக்கும்? உங்கள் விலை உத்திகள் என்ன? நீங்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள விலையில் இலாபம் ஈட்ட முடியுமா?
- நிதிக் கணிப்புகள்: உங்கள் வருமானம், செலவுகள் மற்றும் இலாபத்தை முன் கூட்டியே கணிக்க கூடிய நிதித் திட்டத்தை உருவாக்கவும். இது நிதியினைப் பாதுகாக்கவும் உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் உதவும்.
- சட்ட மற்றும் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைத் தேவைகள்: உங்கள் வியாபாரத்தினை சட்டப்பூர்வமாக இயக்க உங்களுக்கு என்ன உரிமங்கள் மற்றும் அனுமதிகள் தேவை? உங்கள் வியாபாரங்களுடன் தொடர்புபட்டுள்ள சட்டங்கள் குறித்து அறிந்து வையுங்கள்.
இலங்கை நாட்டுக்காக காணப்படும் மேலதிக பரிசீலனைகள்:
- அரச ஆதரவுத் திட்டங்கள்: தொழில் முனைவோருக்கு ஆதரவளிக்க இலங்கையின் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வழங்குகின்றது. அவ்வாறான ஏதாவது உதவிகளுக்கு நீங்கள் தகுதி பெறுகிறீர்களா என்பதைப் பார்க்க ஆய்வு செய்யுங்கள்.
- நிதி பெறும் வழிகள்: உங்கள் வியாபாரத்திற்கு எவ்வாறு நிதி வழங்க முடியும்? கடன்கள், மானியங்கள் அல்லது தனிப்பட்ட முதலீடு போன்ற விருப்பங்கள் குறித்து கவனியுங்கள்.
- கலாச்சாரம் சார் தடைகள்: உங்கள் வியாபார செயற்பாடுகள் அல்லது சந்தைப்படுத்தல் வியூகங்களில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய கலாச்சார காரணிகளையும் கருத்தில் கொள்ளுங்கள்.
உங்கள் ஆய்வினை தொடங்க உதவியாக காணப்படும் வளங்கள் சில
- The Sri Lankan Chamber of Commerce (The Sri Lankan Chamber of Commerce இணையதளம்) தொழில்முயற்சியாளர்களுக்கு தேவையான தகவல்களையும், மூலதாரங்களையும் (Resources and Support) வழங்குகிறது.
- இலங்கை முதலீட்டுச் சபை (The Board of Investment of Sri Lanka இணையத்தளம்) இது முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வியாபாரத்தினை பதிவுசெய்ய அத்தியாவசியமான தகவல்களை வழங்குகின்றது.
- The National Enterprise Development Authority (NEDA) ([NEDA இணையத்தளம்]) தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி மற்றும் உதவித் திட்டங்களை வழங்குகிறது.
- ஏற்றுமதி அபிவிருத்தி சபை (Export Development Board) – நீங்கள் ஏற்றுமதி வியாபாரம் செய்தால் அதற்கு தேவையான விடயங்களை இங்கே பெற முடியும்.
நினைவில் கொள்ளுங்கள், உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்க முழுமையான ஆய்வு அவசியம். சந்தையைப் புரிந்துகொள்வதன் மூலமும், உங்கள் வியாபாரத்தை கவனமாகத் திட்டமிடுவதன் மூலமும், கிடைக்கக்கூடிய வளங்களை சரியாகப் பயன்படுத்துவதன் மூலமும், நீங்கள் இலங்கையில் வெற்றிகரமான தொழிலதிபராக மாறுவதற்கான பாதையில் இருப்பதனை உறுதி செய்ய முடியும்.
Diriya குழுமத்திடம் இருந்து வாழ்த்துகள்!
>>>உங்கள் வணிகத்திற்கான சரியான சந்தைப் பிரிவை எவ்வாறு கண்டறிவது