தொழிநுட்ப வளர்ச்சி, உலகமயமாதல், வாடிக்கையாளர்களின் தெரிவிலுள்ள சிக்கற்தன்மைகள், போட்டியாளர்களின் நடத்தைகள் போன்ற துரிமானதும் புரிந்துகொள்ள முடியாததுமான மாற்றங்களின் காரணமாக தற்போதைய வணிகச் சூழல் மிகவும் குழப்பம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. இதன் விளைவாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் தமது இலக்குகளை வினைத்திறனாகவும் கனகச்சிதமாகவும் நிறைவேற்றுகின்ற அதேவேளை போட்டித் தன்மையில் நின்றுபிடிப்பதும் அதில் வெற்றியீட்டுவதும் மிகவும் சவால்மிகுந்ததாகக் காணப்படுகின்றன.
மறுபுறம், அவ்வாறான தொழில் முயற்சிகள் பலவற்றில் வணிக செயற்பாடுகளைப் பொருத்தமான ஒரு முறையில்; கொண்டு செல்வது குறிப்பிடத்தக்க சவால்மிகு விடயமாக மாறியுள்ளது. குறிப்பாக இது பங்குதாரர்களின் எதிர்பார்க்கைகளைச் சமாளித்துச் செல்வதற்கு முனைகின்ற சந்தர்ப்பத்தின்போது இவ்வாறான நிலை ஏற்படுகின்றது. ஏனெனில், அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையும் சரியாகவோ பிழையாகவோ எடைபோடப்படலாம். எனினும், ஒவ்வொரு ஆளும் நெறிமுறைக்குட்பட்டு நடப்பதற்கு உரித்துடையவராவர் என்பதனால் முன்னெப்போதுமில்லாதவாறு வணிக நெறிமுறைகளும் சமூகப் பொறுப்புடைமைகளும் மிகுந்த கவனத்தைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்களவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
வணிக நெறிமுறைகள்
பண்பாடுரீதியாக சரியானது எது? பிழையானது எது? அல்லது நியாயமானது எது? நியாயமற்றது எது? என்பதனை நிர்ணயிக்கின்ற கொள்கைகள், விழுமியங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றைக் கொண்டு நெறிமுறைகளை வரையறை செய்யலாம். குறிப்பிட்டதொரு சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தை எது? ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை எது என்பவற்றைக் கொண்டு இந்நெறிமுறையம்சங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. முக்கியமாக, குறிப்பிட்டதொரு சூழ்நிலையில், ஒவ்வொரு தனியாளும் அல்லது நிறுவனமும் சரியான நடவடிக்கை எது என்பதனைத் தீர்மானிப்பதற்குத் துணைபுரிகின்ற வழிகாட்டல்களைக் கொண்ட அம்சமே நெறிமுறைகளாகும். ஒரு நிறுவனம் தனது நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்குப் பின்பற்றுகின்ற வழிகாட்டல்களைக் கொண்ட பண்பாடுரீதியான கொள்கைகளையும் நியமங்களையும் வணிக நெறிமுறைகள் குறித்து நிற்கின்றன. பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், விநியோகத்தர்கள், ஒப்படைப்பவர்கள், போட்டியாளர்கள், அரசாங்கம், சமூகம், ஏனைய நலன்விரும்பிகள் போன்றவர்களை உள்ளடக்கிய பங்குதாரர்களே ஒரு வணிக நிறுவனத்தின் நடத்தை ஏற்றுக்கொள்ளப்படுவதனைத் தீர்மானிக்கின்றனர். தனது வணிக நெறிமுறைகளை இனங்கண்டுகொண்ட நிறுவனம் ஒன்று தனது நடவடிக்கைகள் அனைத்திலும் உள்வாரியாகவோ வெளிவாரியாகவோ நெறிமுறைசார் தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடும்.
சமூகப் பொறுப்புடைமைகள்
அண்மைய தசாப்தங்களாக, உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்ற பிரச்சினைகளைப் பல்வேறு வழிகளில் உருவாக்கிவிட்ட நிறுவனங்களின் நெறிமுறைசார் விடயங்களில் அதிகரித்த கவனம் இருந்து வருகின்றது. சுற்றுச்சூழல் மாசடைவது அதிகரித்ததன் விளைவாக ஏற்பட்ட பாதகமான விளைவுகளினால் விமர்சனங்கள் ஏற்பட்ட நிலையில் 1960 மற்றும் 1970 களில் ஏற்பட்ட தொழிற்றுறைப் புரட்சியின் போது சமூகப் பொறுப்புடைமை சார்ந்த கலந்துரையாடல்கள் பல்கிப்பரவியிருந்தன. அதன் காரணமாக, நிறுவனம்சார் சமூகப் பொறுப்புடைமை என்னும் அம்சம் 1980களில் தோற்றம்பெற்றது. அதன் முதற்கட்டமாக, எதிர்கால தலைமுறையினருக்கு உச்ச பெறுமானத்தையும் நன்மைகளையும் ஈட்டிக்கொடுக்கக்கூடிய பொருளியல் வளர்ச்சி என்னும் தத்துவத்தில் மாத்திரம் கவனம் செலுத்துகின்ற பொறிமுறையாகவே நிறுவனம்சார் சமூகப் பொறுப்புடைமை நோக்கப்பட்டது. ஒரு நிறுவனத்தின் இருப்புக்கு அதன் சொந்தக்காரர் எவ்வளவு முக்கியமோ அதேபோலவே வாடிக்கையாளர்கள், விநியோகத்தர்கள், பணியாளர்கள், அரசாங்கம், சமூகம் என்ற வகையிலான பங்குதாரர்கள் அனைவரும் முக்கியம் வாய்ந்தவர்கள் என்பதனால் ஒட்டுமொத்த நிறுவனம்சார் வணிக சூழலும் ஒவ்வொருவரையும் ஒன்றிணைக்கின்ற தனி அமைப்பாக விளங்குகின்றது.
அவ்வாறே, ஒரு வணிக நிறுவனம் சமூகத்தில் மேற்கொள்கின்ற ஒவ்வொரு வணிக நவடிக்கையினதும் பாதகமான தாக்கங்களை இழிவடையச் செய்கின்ற அதேவேளை அதன் சாதகமான தாக்கங்களை மேம்படுத்துவதற்கும் கடமைப்பட்டுள்ளது என்பதைக் கொண்டு ஒரு வணிக நிறுவனத்தின் சமூகப் பொறுப்புடைமையினை வரையறுக்க முடியும்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் எவ்வாறு நெறிமுறைகளையும் சமூகப் பொறுப்புடைமைகளையும் கொண்டுவர முடியும்?
• உரிமையாளர்கள்ஃபங்குதாரர்கள்
இலாபமீட்டலிலும் முதலீட்டின் மூலம் பெறப்படுகின்ற இலாபங்களிலும் முதன்மையாகக் கவனம் செலுத்துகின்ற பங்குதாரர்கள் அல்லது உரிமையாளர்களது எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்துவதே வணிக நிறுவனம் ஒன்றின் அடிப்படைப் பொறுப்பாகும். துல்லியமான முறையில் கணக்குகளையும் ஆவணங்களையும் பேணிவருதல், வணிகத்தைப் பற்றிய தகவல்களை அவர்களுக்கு வழங்குதல், அவர்களது உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களை இது அவசியப்படுத்துகின்றது.
• பணியாளர்கள்
ஒரு நிறுவனத்தின் செயற்பாட்டுக்குப் பணியாளர்கள் இன்றியமையாதவர்களாவர் என்பது பணியாளர்கள் மீது வணிகங்கள் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்புடைமையாகும். பாதுகாப்பானதும் சுகாதாரமானதுமான பணிச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல், நியாயமானதும் வேளைக்கேற்றதுமான ஊதியத்தினை வழங்குதல், தொழிற் சட்டங்களையும் விதிமுறைகளையும் ஒழுகி செயற்படுதல், தொழிற்றுறை முன்னேற்றத்துக்கான சம வாய்ப்புகளை வழங்குதல், சிறுவர் பணியமர்த்துதலைத் தடுத்தல், பணியாளர் நலனோம்பு செயற்பாடுகளை வளப்படுத்துதல் ஆகிய விடயங்களை இது உள்ளடக்குகின்றது. இக்கடப்பாடுகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த வெற்றிக்காகவும் சாதகமான முறையில் பங்களிப்புச் செய்யும் விசுவாசமும் அர்ப்பணிப்பும் உள்ள பணியாட்டொகுதியைக் கட்டியெழுப்ப முடியும்.
• வாடிக்கையாளர்கள்
வணிக நிறுவனங்கள் தமது இருப்புக்காகவும் நீடித்து நிலைபெறுவதற்காகவும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவுசெய்யத்தக்க நெறிமுறைசார் அம்சங்களைப் பேணவேண்டும். உயர்தரமானதும் பாதுகாப்புமிக்கதுமான பொருட்களை நியாயமான விலைக்கு வழங்குதல், வாடிக்கையாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், விற்பனையின் பின்னரான திருப்தி நிலையினை வழங்குதல், உற்பத்திப் பொருட்கள் சம்பந்தமான உண்மையான தகவல்களை வழங்குதல், வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகளை உடனுக்குடன் தீர்த்துவைத்தல் ஆகியன இவற்றுள் அடங்கும். இவ்வாறு செய்வதன் மூலமாக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் அவர்களுடனான நீண்டகால தொடர்பையும் ஈட்டிக்கொள்ள முடியும்.
• சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல் சார்ந்த பொறுப்புகளை நிறைவேற்றுவது வணிக நிறுவனங்களுக்கு இன்றியமையாத அம்சமாக மாறியுள்ளது. வணிக செயற்பாடுகளில் காடழிப்பு, பச்சைவீட்டு வாயுத் தாக்கம், மாசடைவு, காரீயத் தடயம் போன்ற சுற்றுச்சூழற் தாக்கங்களின் பிரதிகூலங்களை இழிவாக்குவதற்காக நிறுவனங்கள் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன. அதேவேளை, காடுகளை உருவாக்குதல், மீள்சுழற்சி சக்திப் பயன்பாடு, விலங்குகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், பசுமை மற்றும் சூழல் நேய உற்பத்திப் பொருட்களைப் புகுத்துதல், மூலப்பொருட்களை மீள்சுழற்சி செய்தலும் மீள்உபயோகப்படுத்தலும், பலதரப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களில் பங்கேற்றல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான முன்நகர்வுகளையும் வணிகங்கள் மேற்கொள்கின்றன.
• சமூகம்
வணிக நிறுவனங்கள் தாம் செயற்படுகின்ற சமூகங்களுக்கும் பொறுப்புடைமை கொண்டனவாக உள்ளன. பிரதேச அபிவிருத்திக்குப் பங்களிப்பு நல்குதல், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல், கலாசாரப் பல்வகைமையை மேம்படுத்தலும் அதற்கு ஆதரவளித்தலும், சமூகத்தின் சுகாதார மற்றும் கல்வி முன்னேற்றத்துக்கான திட்டங்களில் ஈடுபடுதல் ஆகிய விடயங்களை இவை உள்ளடக்குகின்றன. இத்தகைய பொறுப்புடைமைகளை நிறைவேற்றுவதன் மூலம் சமூகத்தில் சாதகமான நற்கீர்த்தியை வணிகங்கள் கட்டியெழுப்புவதோடு சமூக விழுமியங்களையும் வளப்படுத்திக்கொள்ள முடியும்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் வணிக நெறிமுறைகளினதும் சமூகப் பொறுப்புடைமைகளினதும் முக்கியத்துவம்
இன்று பல வணிக நிறுவனங்கள் நெறிமுறை சார்ந்த விடயங்களைக் கடைப்பிடிப்பதற்கும் சமூகத்தில் பொறுப்புடைமையுடன் நடந்துகொள்வதற்கும் சிரத்தையுடன் இருந்து வருகின்றன. இதனால் வணிக நெறிமுறைகளும் நிறுவனம்சார் சமூகப் பொறுப்புடைமையும் போட்டித் தன்மைக்கு அனுகூலமாக அமையும் என்று நிறுவனங்கள் நம்புகின்றன. சுற்றுச்சூழற் தாக்கம் உட்பட்ட நெறிமுறைசார் அம்சங்களிலேயே வாடிக்கையாளர்கள் இன்று கவனம் முக்கிய செலுத்துகின்றனர் என்பதுடன் நெறிமுறைகளுடன் செயற்படுவது நம்பிக்கை மிகுந்த வாடிக்கையாளர்கள் அதிகளவில் கவரப்படுவதற்குக் காரணமாக அமையும். நவீன வணிக உலகில் ஒரு நிறுவனம் கொண்டுள்ள தொட்டுணர முடியாத சொத்தே வணிக நெறிமுறைகளாகும். அவை ஒரு நிறுவனத்தின் அனைத்து வகையான நல்லெண்ணங்களையும் உள்நாட்டில் மாத்திரமல்லாமல் வெளிநாடுகளிலும் மேலோங்கச் செய்கின்றன. பணியாளர்கள் தமது உச்சபட்ச பங்களிப்பை நிறுவனத்திற்கு வழங்குவதற்கும், முகாமையாளர்கள் தமது அனுபவத்தினடிப்படையில் நெறிமுறைசார் தீர்மானங்களை மேற்கொள்வதனை வலுப்படுத்துவதற்கும் கருமங்களை ஒழுங்குமுறையில் மேற்கொவதற்கும் ஊக்கத்துடன் செயற்பட வேண்டும். நிறுவனத்தின் ஒவ்வொரு பங்காளரும் நெறிமுறை தழுவி செயற்படுவார்களாயின் சட்டமுறைச் செலவுகள், இழப்பீடுகள், அபராதங்கள் போன்ற அநாவசியமான செலவுகளை நிறுவனங்கள் குறைத்துக்கொள்ளலாம். பங்குதாரர்களுடன் நீண்டகால பற்றுறுதியான உறவுகளைக் கட்டியெழுப்புவதும் நிறுவனங்களின் நன்மைக்கு வழிவகுக்கும். இறுதியாக, நெறிமுறையைபட பேணி நிறுவனங்கள் செயற்படுவதானது அந்நிறுவனங்களின் செயற்பாட்டுத்திறனை அதிகரிக்கும், குறிப்பாக நிதி விடயங்களில் இது அமையும். நெறிமுறைசார் விடயங்களிலும் சமூகப் பொறுப்புடைமைசார் விடயங்களிலும் கவனம் செலுத்தி உழைப்பது இழப்புகளைக் கொண்டு வந்து சேர்க்காது, மாறாக, அவை நன்மைகளையே கொண்டு வந்து சேர்க்கும்.
இந்த உள்ளடக்கமானது CeFEnI/COSME இன் உதவியுடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்டதாகும்.