“மனித வள முகாமைத்துவம் என்பது ஒரு நிறுவனத்தில் அதன் மூலோபாய இலக்குகளை அடைவதற்கும், உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், சாதகமான பணிச்சூழலை மேம்படுத்துவதற்கும் மனித வள ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான கலையாகும்.”
இன்றைய தொடர்ச்சியாக மாற்றத்துக்கு உள்ளாகும் வணிக சூழலில், மனித வள முகாமைத்துவத்தின் (HRM) பங்கு வெறும் நிர்வாகப் பணிகளை சார்ந்து மட்டுமன்றி அதற்கும் மேலாக முக்கியத்துவம் கொண்டது. திறமையான HRM நடைமுறைகள் வளர்ச்சி, புத்துருவாக்கம் மற்றும் நீண்ட கால நிலைத்திருப்பு ஆகியவற்றில் கணிசமான வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதால் அதன் தேவை இன்றியமையாததாகும். ஒவ்வொரு வெற்றிகரமான வணிகத்தின் பின்பாக அதன் ஊழியர்கள் உள்ளனர். HRM என்பது ஊழியர்களின் திறன்கள் மற்றும் அவர்களின் விருப்பங்களை நிறுவனத்தின் இலக்குகளுடன் இணைக்கும் உந்து சக்தியாகும். தேவையான திறன்கள், உந்துதல் மற்றும் தொழிலில் சிறந்து விளங்குவதற்கான ஆற்றலுடன் கூடிய சரியான நபர்கள் சரியான வேலைகளில் ஈடுபடுவதை இது உறுதி செய்கிறது. HRM ஒரு துடிப்பான பணி கலாச்சாரத்தை வளர்க்கிறது, பணியாளர் ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது மற்றும் அதிக அளவிலான செயல்திறனுக்கு பங்களிக்கிறது. இக்காரணிகள் அதிக இலாபம் மற்றும் வணிக வெற்றிக்கு வழிவகுக்கும். SMEகளின் தகவமைப்பு, புத்துருவாக்கம் மற்றும் நெருக்கமான வேலை சூழல்களின் காரணமாக SMEகள் பெரும்பாலான உலக நாடுகளின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அமைகின்றன. திறமையான HRM இன் தேவை உலகளாவியதாக இருந்தாலும், SMEகள் பெரும்பாலும் தங்கள் அணுகுமுறையை பாதிக்கக்கூடிய வளக் வரையறைகளை எதிர்கொள்கின்றன. இந்த சவால்கள் இருந்தபோதிலும், மூலோபாய HRM நடைமுறைகள் பெரு நிறுவனங்களின் தேவை மாத்திரம் அல்ல மாறாக அனைத்து நிறுவனங்களுக்கும் அவசியமானது என்பதை SMEகள் அங்கீகரிக்கின்றன. திறம்பட ஒழுங்கமைக்கப்பட்ட சரியான நபர்கள், SME களை குறிப்பிடத்தக்க உயரத்திற்கு கொண்டு செல்லும் ஊக்கிகளாக இருப்பர். தனி HR துறைகளைக் கொண்ட பெரிய நிறுவனங்களைப் போலல்லாமல், SME களில் HRM பெரும்பாலும் வணிக உரிமையாளர்கள் அல்லது பல நிர்வாகங்களில் ஈடுபடும் முகாமையாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. முடிவெடுப்பவர்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையிலான இந்த அருகாமை, தனியாள் ரீதியில் கவனம், வலுவான உறவுகள் மற்றும் தனிப்பட்ட மற்றும் கூட்டுத் தேவைகளைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது. SMEக்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. HRM இன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது மற்றும் SMEகளில் HRMஐ தமக்கு இசைவாக அமுல்படுத்துதல் ஆகியவை நிலைபேறான வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு முக்கியமானதாகும். வழமையாக, இத்தகைய நிறுவனங்கள் வள வரையறைகள் காரணமாக HRMஐப் புறக்கணித்திருக்கலாம், ஆனால் வணிக விருத்தியின் போது, வளர்ச்சியை அடைவதில் HRM இன் பங்கு பற்றிய அவர்களின் புரிதல் விரிவடைந்துள்ளது. HRMஇல் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த பணியாளர்களை தக்கவைத்தல், செயல்திறன் மேம்படுத்தல் மற்றும் போட்டிகளுக்கு சிறப்பாக முகம்கொடுக்காலாம் என்பதை SME கள் உணர்ந்துள்ளன. மனித வள முகாமைத்துவம் என்பது எந்த ஒரு நிறுவனத்திற்கும் அதன் அளவு எதுவாக இருந்தாலும் அதன் முதுகெலும்பாக செயல்படுகிறது. SME களில் HRM இன் முக்கியத்துவத்தை பின்வரும் முக்கிய காரணங்கள் வெளிப்படுத்தி காட்டுகின்றன:
திறமையை கையகப்படுத்தல் மற்றும் தக்கவைத்தல்: SMEகள் செயல்பாடுகளில் ஈடுபட சிறிய அளவான பணியாளர்களை நம்பியுள்ளன. எனவே, திறமையான தொழிலாளர்களை ஈர்ப்பதும் தக்கவைப்பதும் இன்றியமையாதது. திறமையான HRM நடைமுறைகள் SME களுக்கு சரியான வேட்பாளர்களை அடையாளம் காணவும், பொருத்தமான தொழில்களில் ஈடுபடுத்தவும் மற்றும் நீண்டகாலம் வேலை புரிய உதவும் சூழலை உருவாக்கவும் உதவுகிறது.
திறன்களை வளர்த்தல்: குறுகிய நிறுவன அமைப்பு காரணமாக SMEகளில் உள்ள ஊழியர்கள் பெரும்பாலும் பல தொழில்களை புரிவர். திறன் இடைவெளிகளைக் கண்டறிவதிலும், பயிற்சித் திட்டங்களை வடிவமைப்பதிலும், தொடர்ச்சியான கற்றல் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும், வளர்ந்து வரும் கேள்விக்கு ஏற்ப பணியாளர்களை மாற்றியமைப்பதிலும் HRM முக்கிய பங்கு வகிக்கிறது.
இணக்கத்திறன் மற்றும் புத்துருவாக்கம்: வேகமாக மாறிவரும் வணிக சூழலில், SMEகள் சுறுசுறுப்பாகவும் புத்துருவாக்கத்திறனுடனும் இருக்க வேண்டும். குறுக்கு-செயல்பாட்டு குழுக்களை உருவாக்குவதற்கும், ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், மற்றும் யோசனைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் புதுமைக்கு பங்களிப்பதற்கும் பணியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கும் HRM வழிவகுக்கிறது.
பணியாளர்களின் ஈடுபாடு: ஈடுபாடுள்ள பணியாளர்கள் அதிக உற்பத்திதிறன், ஊக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் இருந்து தங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கின்றனர். வழக்கமான கருத்து பரிமாற்றம், அங்கீகார திட்டங்கள் மற்றும் தெளிவான தகவல் தொடர்பு போன்ற பயனுள்ள HRM நடைமுறைகள் SMEகளில் பணியாளர்களின் ஈடுபாட்டை குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்தும்.
SMEஇன் HRMஇல் உள்ள சவால்கள்
HRM இன் முக்கியத்துவத்தை அறிந்திருந்தாலும், SMEகள் அவற்றின் வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் குறிப்பிட்ட செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் காரணமாக பயனுறுதி மிக்க நடைமுறைகளைச் செயல்படுத்துவதில் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கின்றன.
வள வரையறைகள்: SME களில் பெரும்பாலும் தனியான HR துறைகள் அல்லது நிபுணர்கள் இல்லாததால், HR நடவடிக்கைகளுக்கு போதுமான நேரத்தையும் வளங்களையும் ஒதுக்குவது சவாலாக உள்ளது. இது தற்காலிக HR முடிவுகளுக்கு வழிவகுக்கும். இது சீரற்ற நடைமுறைகளுக்கு வழிவகுக்கும்.
ஊழியர் பணியமர்த்தல் சவால்கள்: சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பது SME களுக்கு ஒரு சவாலாக இருக்கும். ஏனெனில் அவர்களால் பெரிய நிறுவனங்களைப் போன்ற போட்டிகாரமான ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்க முடியாது. கவர்ச்சிகரமான வேலை பொறுப்புகளை உருவாக்குவது மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சி திறனை வெளிப்படுத்துவது முக்கியமானது.
வரையறுக்கப்பட்ட வளர்ச்சி வாய்ப்புகள்: குறைவான நிர்வாக படிநிலை காரணமாக, SMEகள் பதவி உயர்வு வாய்ப்புகளை வழங்குவது கடினமாக இருக்கலாம். இது ஊழியர் ஊக்கப்படுத்தல் மற்றும் தக்கவைப்பை பாதிக்கலாம், ஏனெனில் இலட்சிய நோக்குடைய நபர்கள் தொழில் முன்னேற்றத்திற்காக வேறு இடங்களில் பதவிகளை தேட வழிவகுக்கும்.
இடர் முகாமைத்துவம்: சட்ட திட்டங்களுக்கு அடிபணிதல், தொழிலாளர் விதிமுறைகள் மற்றும் பணியாளர் உரிமைகள் ஆகியவை HRMஇன் முக்கியமான கோட்பாடுகளாகும். எவ்வாறாயினும் இந்த சிக்கலான பகுதிகளில் கவனம் செலுத்த SMEகளிடம் நிபுணத்துவம் இல்லாமல் இருக்கலாம். இதன் காரணமாக சட்ட சிக்கல்களுக்கு ஆளாகின்றன.
SMEகளுக்கான பயனுறுதியான HRM உத்திகள்
சவால்களைக் கருத்தில் கொண்டு, SMEக்கள் தங்கள் HRM நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும், சாதகமான வேலைச்சூழலை உருவாக்குவதற்கும் பல உத்திகளைப் பின்பற்றலாம்:
தெளிவான HR கொள்கைகள்: தனியான HR குழு காணப்படாவிட்டாலும் நன்கு வரையறுக்கப்பட்ட HR கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை நிறுவுதல் மூலம் ஆட்சேர்ப்பு, செயல்திறன் மதிப்பீடு மற்றும் பணியாளர் பலன்கள் போன்ற பகுதிகளில் நிலைத்தன்மையை வழங்க முடியும்.
HR செயல்பாடுகளை வெளியாகப்படுத்தல்: முழுநேர HR நிபுணரை பணியமர்த்துவது சாத்தியமில்லை என்றால், SMEகள் சில HR செயல்பாடுகளை வெளியாகப்படுத்துவதை பரிசீலிக்கலாம். அதாவது ஊதியச் செயன்முறை, சட்டதிட்ட கீழ்ப்படிவு சேவைகள் மற்றும் ஆட்சேர்ப்பு போன்ற செயல்பாடுகளை HRஇல் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு கொடுக்கலாம்.
ஊழியர் மேம்படுத்தல்: குறைந்த வளர்ச்சி வாய்ப்புகள் இருந்தபோதிலும், SME கள் ஊழியர்களை பல்வேறு பொறுப்புகளை ஏற்க அனுமதிப்பதன் மூலமும், அவர்களின் திறன்களை விரிவுபடுத்த அவர்களை ஊக்குவிப்பதன் மூலமும் கிடையான வளர்ச்சியை வலியுறுத்த முடியும்.
ஊழியர் செயல்திறனுக்கு அங்கீகாரம் வழங்குதல்: பண ஊக்குவிப்புகள், பாராட்டுகள் அல்லது வளர்ச்சி வாய்ப்புகள் மூலம் ஊழியர்களின் பங்களிப்புகளை தவறாமல் அங்கீகரித்து வெகுமதி அளிப்பது வேலை திருப்தி மற்றும் ஊக்கத்தை மேம்படுத்தும்.
தொழில்நுட்பத்தில் முதலீடு செய்தல்: பயன்படுத்துவோருக்கு ஏதுவான HR மென்பொருளை நடைமுறைப்படுத்துவது மூலம் பணி விடுமுறை முகாமைத்துவம், செயல்திறன் மதிப்பீடுகள் மற்றும் ஊழியர்களின் பதிவுகள் போன்ற நிர்வாகப் பணிகளை ஒழுங்குபடுத்துகிறது. இதனால் மூலோபாய HR நடவடிக்கைகளுக்கான நேரத்தை ஒதுக்கித்தருகிறது.
திறந்த தொடர்பாடல்: ஊழியர்களுடன் திறந்த தொடர்பாடலை பேணுவது, ஈடுபாடு மற்றும் தம் மீது நிறுவனத்துக்கு அக்கறை உண்டு என்ற உணர்வை வளர்க்கும். வழக்கமான பின்னூட்டல்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் கவலைகளைக் கூறுவதற்கான வாய்ப்புகள் ஒரு சாதகமான வேலைச்சூழலை உருவாக்க உதவும்.
நெகிழ்வுத்தன்மையுடனான வேலை ஏற்பாடுகள்: வீட்டிலிருந்தே வேலை செய்தல் அல்லது நெகிழ்வுத்தன்மயுடனான வேலைநேரங்கள் போன்ற நெகிழ்வான வேலை விருப்புரிமைகளை வழங்குவதன் மூலம், பரந்த அளவிலான திறமையாளர்களை ஈர்க்கலாம் மற்றும் பணியாளர்களுக்கு வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தலாம்.
SME களுக்கு HRM தேவையா என்ற கேள்வி மறுக்க முடியாதது, ஏனெனில் இது வெற்றிக்கு இன்றியமையாத ஒன்றாகும். திறமையாளர்கள் ஒரு போட்டிகரமான சகாப்தத்தில் போட்டி அனுகூலமாக இருக்கும். பயனுறுதிமிக்க HRM ஆனது SME களுக்கு ஒரு சாதகமான மாற்றமாக இருக்கும். மனித வள முகாமைத்துவம் என்பது பெரிய நிறுவனங்களுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்ட ஆடம்பரம் அல்ல; இது SMEகளின் வளர்ச்சி மற்றும் நிலைப்புத்தன்மையின் அடிக்கல்லாகும். உலகெங்கிலும் உள்ள வணிகங்கள் HRM இன் முக்கிய பங்கை அங்கீகரிக்கின்றன. SMEக்கள் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்த HRMஇன் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். அவர்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களைப் புரிந்துகொள்வதன் மூலம், மூலோபாய தீர்வுகளைச் செயல்படுத்தி, அவர்களின் பணியாளர்களின் பங்களிப்புகளை மதிப்பிடுவதன் மூலம், வணிகம் மற்றும் ஊழியர்கள் இருவரும் செழித்து வளரும் சூழலை SMEகள் வளர்க்க முடியும். வணிகம் வளர்ச்சியடையும் போது, பயனுள்ள HRM நடைமுறைகளைத் தழுவும் SMEகள் உலகப் பொருளாதாரத்தில் வெற்றியின் கலங்கரை விளக்கங்களாக உயர்ந்து நிற்கின்றன.
Very use full