spot_imgspot_img

நீங்கள் ஒரு தலைவரா?

உங்கள் வாழ்நாளில் உங்களை ஊக்கப்படுத்திய எந்தத் தலைவர்களையும், அவர்களைப் போல நீங்களும் மாற வேண்டும் என நினைக்கின்ற எவரையும் நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? உங்கள் கனவை நனவாக்க உங்கள் பலம் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை ஏன் மதிப்பிடக்கூடாது?

அத்தகைய தலைவர்கள் சில பொதுவான ஆளுமைப் பண்புகள், பழக்கவழக்கங்கள் மற்றும் குணாதிசயங்களைப் தம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது நிதர்சமான உண்மை. எனவே, நீங்கள் ஏற்கனவே என்ன தகைமையை வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள கீழே உள்ள கேள்விகளை நீங்களாகவே உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். அந்த சிறந்த ஆளுமைகளைப் போல் மாற நீங்கள் எப்படி உங்களை மேம்படுத்த வேண்டும் என்பதை அதன் மூலமாக அறிந்து கொள்ளுங்கள்.

புத்தாக்கமானவர்களாகவும் மற்றும் மூலோபாயத்துடனும் ஆரம்பிப்போம்!

மற்றவர்களை விட சிறப்பாக சிந்திப்பதும், உங்கள் நேரத்தை நிர்வகிப்பதும், ஒரு தலைவராக வெற்றிபெற மிகவும் முக்கியமானவை. உங்கள் வழியில் வரக்கூடிய சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நீங்கள் எதிர்வுகூறவும், முன்கூட்டியே எதிர்பார்க்கவும் உங்களால் முடிதல் வேண்டும். அது போதாது. புத்தாக்கமான மற்றும் ஆக்கபூர்வமான மனநிலையுடன் சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பதில் நீங்கள் சிறந்தவராக இருக்க வேண்டும். இதன் விளைவாக நடைமுறைச்சாத்தியமான, பயனுள்ள தீர்வுகள் கிடைக்கும்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் எந்தவொரு வெற்றிகரமான தலைவருக்கும் இது பொதுவான பண்பு. எனவே, உங்கள் -சிந்தனைத் திறன்களை நீங்கள் வளர்த்துக்கொள்வதையும், நீங்கள் வலுவான மற்றும் சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இரண்டாவதாக, உங்கள் பணி இலக்கினை உங்கள் அணிக்கு சரியாக தெரியப்படுத்தும் திறன்

உங்கள் தீர்மானங்களைப் பற்றி உங்கள் அணிக்கு உடனுக்குடன் அறியத்தருவது மிகவும் முக்கியம், மேலும் உங்கள் பணி இலக்கினை உங்கள் அணிக்குத் தெரிவிப்பது உங்கள் கடமை. இதன் அர்த்தம் நீங்கள் உண்மையிலேயே உங்கள் தலைமைத்துவத்துடன் பணியாளர்களை ஊக்குவிக்க விரும்பினால், சிறப்பான தகவல் தொடர்பாடல் திறன்களைக் கொண்டிருப்பது அவசியம். தொடர்பாடல் என்பது ஒருவழித் தொடர்பாடல்ல. முடிந்தவரை உங்கள் அணியின் கருத்துக்களுக்கு செவிமடுப்பது மற்றும் அவர்களின் யோசனைகளைக் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம். இருவழி தொடர்பாடல் எல்லாவற்றையும் சிறப்பாகவும் எளிதாகவும் மேற்கொள்ளச் செய்கிறது.

சரி, இப்போது நீங்கள் என்ன இலக்கினை அடைய விரும்புகிறீர்கள் என்பது அணிக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தங்கள் பணியில் திறம்பட ஈடுபடும் அளவுக்கு அவர்களை ஊக்கப்படுத்துகிறீர்களா?

உங்களைப் பின்பற்றுபவர்கள் உங்களையும் உங்கள் தீர்மானங்களையும் நம்புவது மிகவும் முக்கியம். உங்கள் அறிவுரையை மக்கள் பின்பற்றுகிறார்களா என்று நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரம் இது. உங்கள் நம்பிக்கை மற்றும் நேர்மறையான அணுகுமுறைக்காக நீங்கள் அறியப்படுகிறீர்கள் என்று நினைக்கிறீர்களா? உங்கள் சகிப்புத்தன்மை மற்றும் மீண்டு எழுகின்ற திறனுக்காக பணியாளர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக நினைக்கிறீர்களா? இந்தப் பயணத்தில் உங்களுடன் கைகோர்த்துப் பயணிப்பதற்கான ஆற்றல், பகிரப்பட்ட பணி இலக்கு மற்றும் தீவிர உணர்வைப் பேண அவர்களுக்கு உதவுகிறீர்களா? ஆம் எனில், அவர்கள் உங்களுடன் முழு மனதுடன் ஒன்றாகப் பயணிப்பார்கள். ஆனால் நீங்கள் பின்னூட்டக் கருத்து மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைத் தேடிக் கண்டறிவதன் மூலம் சமநிலையைப் பேணிப் பராமரிக்க வேண்டும். உங்கள் தீர்மானங்கள் மற்றும் செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

நீங்கள் உண்மையானவரா மற்றும் நேர்மையானவரா?

ஒரு சிறந்த தலைவராக இருக்க, மக்கள் உங்களைப் பின்தொடர விரும்பும் திறன்களை நீங்கள் பெற வேண்டும், மேலும் அந்த திறன்களில் ஒன்று அவர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பெறுவதாகும். அவ்வாறு செய்ய, நீங்கள் எப்போதும் உங்கள் செயல்களிலும் நடத்தையிலும் சீராக இருப்பது அவசியம். எனவே, அவர்களின் விசுவாசத்தை எதிர்பார்ப்பதற்கு முன், நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறீர்கள் மற்றும் கடினமான நிலைமைகளில் உங்கள் அணிக்கு ஆதரவாக நிற்க விரும்புகிறீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நியாயமாக இருப்பதும் உங்கள் பரஸ்பர உடன்பாடின் ஒரு பகுதியாகும். இது ஊழியர்களை மகிழ்ச்சியாகவும், சரியான வழிகாட்டுதலுடனும் வைத்திருக்கும் அதே நேரத்தில், ஒரு பாரபட்சமற்ற தலைவரின் உத்தரவாதத்தைக் கொண்டிருக்கும். சுருங்கச் சொன்னால், முன்னுதாரணமாகத் திகழும் வகையில் வழிநடத்துங்கள்!

இறுதியாக, உங்கள் மூன்றாவது கண்ணைத் திறந்து வையுங்கள்!

மற்றவர்களை வளர்ப்பது உங்கள் கடமை. உங்கள் மூன்றாவது கண்ணைப் பயன்படுத்துவது சிரமமின்றி இந்த திறனை வளர்க்கும். உங்கள் அணியின் திறன் என்ன என்பதை எப்போதும் புரிந்துகொள்ள முயற்சிக்கவும். உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவாறு, மற்றவர்களின் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் மிகவும் ஆக்கபூர்வமாக இருக்க முடியும் – பொதுவாக உங்களுடையதை விட அதிகமாக இருக்கும்! நீங்கள் அந்த அணியின் மத்தியில் புத்திசாலித்தனமான நபராக இருந்தால், ஒரு தலைவராக நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று பல முறை கூறப்பட்டுள்ளது. எனவே இந்த திறமைகளைத் தேடி அவற்றைப் பயன்படுத்துங்கள். உங்கள் அணியை எப்போதும் நம்புங்கள்! நீங்கள் அடுத்தவர்களை ‘வலுவூட்டுகின்ற தலைவராக’ மாறும் ஆர்வம் கொண்டிருந்தால், ஸ்டீபன் கோவியின் The 8th Habit: From Effectiveness to Greatness என்பதை வாசித்து விளங்கிக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.

இவற்றைப் பின்பற்றுவது உங்களுக்கு கடினமானதா அல்லது கஷ்டமானதா? தெளிவான பதில் இல்லை என்பதே.

எனவே, இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தி, உங்கள் அணி மகிழ்ச்சியாகவும் உற்பத்தித் திறன் கொண்டதாகவும் இருக்கவும், மேலும் உங்கள் தொழில் பாதையிலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நீங்கள் விரும்பிய நோக்கங்களை அடையவும் அவற்றை சாதமாக்கிக் கொள்ளுங்கள்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X