பாரம்பரிய நிதி வளத்திற்கான வடிவங்கள் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட வங்கி மற்றும் நிதித் துறை, பௌதிக அல்லது நிதியியல் சொத்து மதிப்பு, மேலும் அந்த மதிப்பில் நிறுவனங்கள் வர்த்தகம் செய்யும் திறன் ஆகியவற்றை நம்பியுள்ளன – ஒரு தொடக்க அல்லது நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக முயற்சிக்கு இவை அனைத்தும் கடினமாக இருக்கும்! இருப்பினும், ஒரு நல்ல செய்தி என்னவென்றால், நிதி வளம் அதிகரித்த அளவில் நெகிழ்வானதாகவும், இன்று பல மார்க்கங்கள் மூலமாகவும் கிடைக்கிறது. பாரம்பரிய நிதி வள வடிவங்கள் இணைய சகாப்தத்தில் தோன்றியுள்ள வடிவங்களால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இணைய சகாப்தத்தில் அவற்றுக்கான வசதி மற்றும் கிடைக்கும் தன்மை ஆகிய இரண்டிலும் அவை நெகிழ்வானவை. அத்தகைய சில வடிவங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
வருமதி வசூல் சேவை
ஒரு வணிகமானது தனது பணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு நிதி நிறுவனத்திற்கு அதன் வருமதி கணக்குகளை ‘விற்க” இடமளிக்கிறது.
இது பெரும்பாலும் வணிகங்களால் அவற்றின் எதிர்பாராத மற்றும் அவசர பணத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
நிதி நிறுவனங்கள் வழக்கமாக 70% – 90% தள்ளுபடி வீதத்தில் அத்தகைய வருமதிகளை ‘வாங்கும்’, இந்த வீதமானது நிறுவனத்திற்கு நிறுவனம் மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும்.
ஒரு வணிகத்திற்கு பணம் தேவைப்படும் இடத்தில் இது உபயோகப்படுவதுடன், கடன் விற்பனையை மேற்கொள்ளவும் இடமளிக்கிறது.
விற்பனை உத்தரவாதம் மற்றும் குறுகிய கால (3-6 மாதங்கள்) நிதித் தேவைகள் உள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் இது சிறந்தது.
நுண் நிதி
பங்களாதேஷின் கிராமின் வங்கியால் நுண் நிதி பிரபலமானது என்றால் மிகையாகாது. பின்தங்கிய சமூகங்களை இலக்காகக் கொண்ட நுண் கடன்கள் முதல் விசேட தொழில்துறை ஆதரவு கடன் திட்டங்கள் வரையிலான பரந்த அளவிலான சேவைகளை நுண் நிதி உள்ளடக்கியது.
முறையான நுண்கடன் சேவைகள், கடன் கொடுனரால் வழங்கப்படும் ஆலோசனைச் சேவைகள் மற்றும் பயிற்சி போன்றவற்றையும் உள்ளடக்கியவை.
இது “குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு நிதிச் சேவைகளை வழங்குதல்” என விவரிக்கப்படுவதால், நுண்கடன் போன்ற நுண் நிதி திட்டங்கள் பெரும்பாலும் பிணையின்றி நெகிழ்வான மீள்கொடுப்பனவுத் தெரிவுகளுடன் கிடைக்கின்றன.
கூட்டு நிதி
Kickstarter போன்ற இணைய அடிப்படையிலான முயற்சிகளால் உலகளவில் பிரபலமாகியுள்ள கூட்டு நிதி ஆனது, ஒரு தயாரிப்பு அல்லது சேவைக்கான திட்டத்தை பொதுமக்கள் முன்வைப்பதற்கு வணிகத்திற்கு வாய்ப்பினை வழங்குகிறது. இதன் மூலம் சந்தைக்கு அவற்றைக் கொண்டு வருவதற்கு சிறு தொகைகளைக் கொண்ட நிதியுடன் பங்களிக்க மக்களை அழைக்கிறது.
பெரும்பாலான சமயங்களில், நிதியளிக்கப்பட்ட மென்பொருளின் இலவச பிரதிகள் அல்லது உருவாக்கப்பட்ட உபகரணங்களை வாங்குவதற்கான தள்ளுபடி விலைகள் போன்ற வெகுமதிகளை நிதியை வழங்கும் தரப்பு பெற்றுக்கொள்கிறது.
இது கூட்டு நிதி தளத்தின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மற்றும் ஏனைய பொருந்தக்கூடிய அரசாங்க விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறது என்றாலும், இது ஆபத்து குறைவான, சௌகரியமான நிதி வழங்கல் பொறிமுறையாகக் கருதப்படுகிறது.
பெரும் செல்வந்தர்களின் முதலீடு
பெரும் செல்வந்தர்களின் முதலீடுகள் தொழில்நுட்பத் துறையில் மிகவும் பிரபலமாக உள்ளன, இது வேகமாக வளர்ச்சி கண்டு வரும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையால் வழிநடத்தப்படுகிறது.
பெரும்பாலான சமயங்களில், ஒரு பெரும் செல்வந்தரான முதலீட்டாளர் ஒரு தனிநபர் ஆக காணப்படுவதுடன், அவர் கைமாற்றத்தக்க கடனுக்கு (இறுதியில் பங்குகளாக மாற்றக்கூடிய கடன்) அல்லது வணிகத்தின் பங்குக்கு ஈடாக ஒரு ‘வளர்ச்சி வாய்ப்புக் கொண்ட’ வணிகத்தில் முதலீடு செய்வார்.
ஆவணச் சுமை கொண்ட வங்கிக் கடன்களுக்கு நேர்மாறாக இது மிகவும் சௌகரியமானது என்றாலும், முதலீட்டாளருக்கு அதிக முதலீட்டு ஆபத்து மற்றும் தொழில்முனைவோருக்கு தமது வணிகத்தின் மீதான அதிகார இழப்பு/குறைப்பு போன்ற தீமைகளைக் கொண்டுள்ளது.
மேற்கூறிய கூட்டு நிதி தளங்கள் மற்றும் Lankan Angel Network போன்ற நிறுவனங்கள் பெரும்பாலும் பெரும் செல்வந்தர்களின் முதலீடுகளுக்கு ‘வணிக-முதலீட்டாளர் பொருத்தத்திற்கு’ உதவுகின்றன.
சிறந்த வணிகத் தொடக்கமாக இருக்கக்கூடிய மற்ற அனைத்து கூறுகளும் உங்களிடம் இருந்தால் மற்றும் பாரம்பரிய நிதி வளத்திற்கான வாய்ப்புக்கள் கைநழுவிப் போனால், இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிமுறைகளை ஆராயுங்கள், அது எப்படி இடம்பெற்றது என்பதை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்!