முதலில், திட்ட முகாமைத்துவம் என்பது ஒரு திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் நிர்வகிக்கும் கலையாக கருதுவோம். திறமையான திட்ட முகாமைத்துவத்தின் மிக நேரடியான விளைவு, தேவையான குறைந்தபட்ச நேரத்தை உள்ளடக்கியவாறு, ஒரு தொகுதி இலக்குகளை திறமையாகவும், திறம்படமாகவும் அடையும் திறன் ஆகும்.
திட்ட முகாமைத்துவத்தின் முக்கிய நோக்கம், திட்ட இலக்குகளை அடைய மற்றும் பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய திட்டத்தை ஒழுங்கமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகும்.
திட்டத்தின் பொதுவான பண்புகள்
- காலவரிசை: ஒரு திட்டமானது அடையாளம் காணக்கூடிய தொடக்கம் மற்றும் முடிவுப்புள்ளியுடன் ஒரு திட்டவட்டமான காலவரிசையைக் கொண்டுள்ளது.
- வளங்கள்: ஒரு திட்டமானது மூலதனம் மற்றும் மனிதவளத்தின் வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டுள்ளது.
- கருவிகள்: திட்ட முகாமைத்துவத்திற்கு விசேட வகை கருவிகள் மற்றும் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன (Gantt Charts, போன்றவை)
- அணி: திட்ட முகாமைத்துவத்துக்கு பல்வேறு துறைகள் மற்றும் செயல்பாடுகள் முழுவதும் நீளும் அணி தேவைப்படுகிறது.
திட்ட முகாமைத்துவத்தின் கட்டங்கள்
திட்ட முகாமைத்துவ கற்கைநிலையம் (Project Management Institute (PMI)) திட்ட முகாமைத்துவத்தின் பின்வரும் கட்டங்களை பரிந்துரைக்கிறது. இது ஒரு திட்டத்தை முகாமைத்துவம் செய்வதற்கான பணிகளுக்கு நியமிக்கப்படும் எவருக்கும் உதவியாக இருக்கும்.
- திட்ட ஆரம்ப கட்டம்
இது திட்ட முகாமைத்துவத்தின் முதல் கட்டமாகும். இந்த கட்டத்தில், திட்டம் ஒரு சிக்கலான மட்டத்தில் தொடங்கப்பட்டு வரையறுக்கப்படுகிறது. இதில் சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்படுவதும் அடங்கும். திட்டத்தை முதலில் செயல்படுத்தலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க, அத்தகைய ஆய்வு அல்லது கலந்துரையாடல் தேவைப்படலாம்.
- திட்டமிடல் கட்டம்
இது ஒரு வீட்டின் அத்திவாரத்தைப் போன்றது. இந்த கட்டத்தில், ஒரு திட்ட முகாமைத்துவ திட்டம் உருவாக்கப்படுகிறது. திட்ட நோக்கம், செலவு, தொழில்நுட்பம், தகவல் தொடர்பாடல், வளங்கள் மற்றும் அபாயங்கள் தொடர்பான தனிப்பட்ட திட்டங்கள் இதில் அடங்கும். சரியான வளங்களைப் பயன்படுத்துவதற்கும், செயல்பாட்டின் போது எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கும் இது உரிய வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இது திட்ட அணிக்கு செலவு மற்றும் கால அளவு போன்ற முக்கியமான தகவல்களையும் வழிகாட்டுகிறது. வலுவான திட்டமிடலானது, திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் முடிவைத் தீர்மானிக்கும்.
- திட்டத்தை செயல்படுத்தும் கட்டம்
இங்குதான் செயல் திட்டம் வடிவம் பெறுகிறது. அணியானது எதிர்பார்த்த விளைவை உருவாக்க வளங்கள், உழைப்பு மற்றும் அறிவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும். திட்டம் செயல்படுத்தும் கட்டத்தில் என்ன நடக்கிறது என்பது உங்கள் திட்டம் வெற்றிகரமாக இருக்கப் போகிறதா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது.
- திட்ட கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு
செயல்படுத்தல் இந்த நடவடிக்கையுடன் ஒன்றித்துள்ளது. இது செயல்திறனின் அளவீடு அல்லது செயல்திட்டத் திட்டத்திற்கு ஏற்ப அதன் வளர்ச்சிப் படிநிலை ஆகும். “scope creep” நிர்வகிக்கப்படும் போது, முன்னர் அமைக்கப்பட்ட குறிகாட்டிகள் அடையப்படுவதை உறுதிசெய்து, திட்டத்தின் வளர்ச்சி முன்னேற்றம் தீவிரமாக கண்காணிக்கப்படல் வேண்டும். திட்டத்தின் இலக்குகள் அல்லது நோக்கங்களை முடிக்க தேவையான பணிகளின் வெற்றியை தீர்மானிப்பதில் குறிகாட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திட்டம் தோல்வியடையாமல் இருக்க, தேவையற்ற நேரம், ஆற்றல் மற்றும் செலவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள இந்த கட்டம் இன்றியமையாதது.
- திட்ட நிறைவுக் கட்டம்
இலக்குகளை அடைந்தவுடன், இறுதி வெளியீட்டை வாடிக்கையாளருக்கு வழங்க முடியும். இது திட்டத்தின் நிறைவைக் குறிக்கிறது. இந்த கட்டத்தில், வெளியீடு ஒரு தயாரிப்பு அல்லது சேவை வடிவத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்த செயல்முறையையும் மதிப்பாய்வு செய்தல், வளங்களை விடுவித்தல் மற்றும் அணி உறுப்பினர்களுக்கு வெகுமதி அளிப்பது மற்றும் அங்கீகரிப்பது ஆகியவை சிறந்த திட்டங்களை உருவாக்க உதவும்.